மதுரை: ‘திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற கலெக்டர் 144 தடை உத்தரவை பிறப்பிக்க தவறினால், தீவிரமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும்’ என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சென்னை அலர்மேல் வள்ளி தாக்கல் செய்த மனு: கொடைக்கானல் மாப்பிள்ளை முதலி சாலையோரத்தில், செயின்ட் அந்தோணி சர்ச் நிர்வாகம் மற்றும் செல்வம் தரப்பு ஆக்கிரமித்துள்ளது. அங்கீகாரமற்ற கட்டுமானம் உள்ளது. அதை அகற்றிவிட்டு, பூங்கா அமைக்க கொடைக்கானல் நகராட்சி கமிஷனர், தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.
2024 ஜூன் 19ல் இரு நீதிபதிகள் அமர்வு, ‘சர்ச் நிர்வாகம், செல்வத்திற்கு நகராட்சி கமிஷனர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விசாரணைக்கு பின், மனுதாரர் முன்வைத்துள்ள வாதங்களில் நியாயம் இருப்பதாக கருதினால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதை 3 மாதங்களில் முடிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டது.
இதை நிறைவேற்றாததால், நகராட்சி கமிஷனர் சத்தியநாதன், தாசில்தார், இன்ஸ்பெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆனந்தவள்ளி ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த இயலவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. அங்கு நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த காணொலி பதிவு எங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டன.
அதில் ஒருவர், மாவட்ட நிர்வாகம், நீதிமன்றங்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுப்பதை காண்கிறோம். அவர் பேசுவதை துரதிர்ஷ்டவசமாக அதிகாரிகள் மவுனமாக செவிமடுத்துக் கொண்டிருந்தனர். அந்நபரை கைது செய்திருக்க வேண்டும்.
திண்டுக்கல் கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப் போதிய போலீசாரை திரட்டி, நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும். யாரும் இடையூறு விளைவித்தால், அவர்களை கைது செய்து, நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்துவதில் நீதித்துறை நடுவர் கடுமையை கடைபிடிப்பார். நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதை பொறுத்தவரை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எவ்வித பங்கும் இல்லை. தேர்தல் நடத்தை விதிகள் இதற்கு வழிவிட வேண்டியிருக்கும். இதை நிறைவேற்றியது குறித்து ஏப்., 10ல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூர்கிறோம். இந்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், கலெக்டர் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு, 144ன் கீழ் தடை உத்தரவை பிறப்பித்தார்.
இவ்வழக்கில் உத்தரவை செயல்படுத்துவதற்கும், அவர் அதேபோன்ற அணுகுமுறையை கையாள்வார் என, எதிர்பார்க்கிறோம். தவறும் பட்சத்தில், தீவிரமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
