பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்குள்ள அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
பிரான்ஸ், இத்தாலி, அல்பேனியா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. குறிப்பாக, பாரிஸ் நகரம் வன்முறையில் பற்றி எரிகிறது; இது, பிரான்ஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடி, கடும் விலைவாசி உயர்வு உட்பட பல பிரச்னைகளை முன்வைத்து, பல ஐரோப்பிய நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பிரான்சில் துவங்கிய இந்த போராட்டம், இத்தாலி, அல்பேனியா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியது. தற்போது இந்த நாடுகள், போராட்டங்களை தடுத்து நிறுத்த முடியாமல் திணறுகின்றன.
பிரான்சில் பிரச்னை மிகவும் தீவிரமடைந்துள்ளது; நாளுக்கு நாள் நடக்கும் போராட்டங்களால், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன; கடைகள் உள்ளிட்டவை சூறையாடப்பட்டுள்ளன. போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதல் என, சாதாரணமாக துவங்கிய போராட்டம், பெரும் வன்முறையாக மாறியுள்ளது.
போதிய கல்வி வசதிகள் இல்லாததை கண்டித்து, பிரான்சின் பாரிசில் சமீபத்தில் போராட்டங்கள் துவங்கின. சில மாணவர் அமைப்புகள் துவங்கிய போராட்டங்களில் ஆசிரியர்களும் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, போராட்டங்கள் நாடு முழுதும் பரவியது. இதற்கிடையே, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை முன்வைத்து வேறு சில அமைப்புகளும் இந்த போராட்டங்களுக்குள் நுழைந்தன.
அரசுக்கு எதிரான அமைப்புகளை சேர்ந்தவர்கள், நாசவேலைகளில் ஈடுபடுவோர், போராட்டக்காரர்கள் என்ற பெயரில் களத்தில் குதித்தனர். கருப்பு உடை, முகமூடி அணிந்த இவர்கள், கடைகளை உடைத்து கொள்ளை அடிப்பது, தீ வைப்பது என, வன்முறையில் இறங்கினர்.
பாரிசில் கடந்த வாரம், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் குவிந்தனர். போராட்டம் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், கருப்பு உடை மற்றும் முகமூடி அணிந்த கும்பல், வன்முறையில் ஈடுபட்டது, பிரச்னையை தீவிரமாக்கியுள்ளது.
லிமோஜஸ் நகரில் உள்ள 140 ஆண்டுகள் கால பழமையான டவுன் ஹால் கட்டடத்துக்கு, போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இரு உலகப் போர்களிலும் தப்பிய இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டடம், தற்போதைய வன்முறையில் தீக்கிரையானது.
தலைநகர் பாரிசில் போலீசார் – போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், 150க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டங்களில் அத்துமீறிய 2,500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.
பிரான்சில் அமைதியை மீட்கும் முயற்சியாக தலைநகர் பாரிசில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாரிஸ் மற்றும் பிற முக்கிய நகரங்களின் பல பகுதிகளில், பொது ஆர்ப்பாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
