பாகிஸ்தானில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், டாப் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக, ஓபனர் பக்கர் ஜமான், கோல்டன் டக் ஆகி ஷாக் கொடுத்தார். மேலும், சைம் அயுப் 8 (6), பாபர் அசாம் 34 (52), சாத் பெய்க் 35 (54) போன்றவர்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதனால், பாகிஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் 133/5 என தடுமாறிய நிலையில், அடுத்து ஹசன் நவாஸ் 79 (74), அராபட் மின்ஹாஸ் 59 (58) ஆகியோர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்கள். இதனைத் தொடர்ந்து, இறுதிக் கட்டத்தில், பஹிம் அஷ்ரப் 26 பந்தில் 39 ரன்களை குவித்ததால், பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 302/9 ரன்களை எடுத்தது.
இங்கிலாந்து அணி பௌலர், சோனி பேக்கர், 9 ஓவர்களில் 65 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார். மேலும், கஸ் அட்கின்சன் 7 ஓவர்களில் 35 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார்.
இங்கிலாந்து இன்னிங்ஸ்: 303 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், டாப் ஆர்டர் பேட்டர்கள் அதிரடியான துவக்கத்தை கொடுத்தனர். ஓபனர், டாம் பன்டன் 53 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 57 ரன்களை சேர்த்த நிலையில், பென் டக்கெட் 46 பந்தில் 8 பவுண்டரி உட்பட 45 ரன்களை சேர்த்தார்.
இப்படி, ஓபனர்கள் இருவரும் அதிரடியான துவக்கத்தை கொடுத்ததால், இங்கிலாந்து அணி, 18.2 ஓவர்களில் 120/1 ரன்கள் என்ற நல்ல நிலையில் இருந்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அப்போது கணிக்கப்பட்டது.
படுசொதப்பல்: ஓபனர்கள் இருவரும் அபாரமாக விளையாடிவிட்டு சென்றப் பிறகு, ஜோ ரூட் 33 (35), சாம் கரண் 27 (39) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு பெரிய ரன்களை அடித்தனர். கேப்டன் ஹேரி ப்ரூக் 5 (7), ஜோர்டன் காக்ஸ் 18 (16), வில் ஜாக்ஸ் 19 (24) போன்றவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், 120/1 என இருந்த இங்கிலாந்து அணி, இறுதியில் 215/10 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி, 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
பாகிஸ்தான் அணியின் இடது கை ஸ்பின்னர், அராபட் மின்ஹாஸ் சிறப்பாக பந்துவீசி, 8.4 ஓவர்களில் 40 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 21 வயதாகும் மின்ஹாஸ், இப்போட்டிக்கு முன்புவரை, 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி, 7 விக்கெட்களை எடுத்திருந்தார். இதில், ஒரு போட்டியில் 32 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை எடுத்ததுதான் இவரது பெஸ்டாக இருந்தது. இந்நிலையில், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்களை எடுத்துள்ளார்.
இதற்குமுன், முதல் லீக் போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி அபார வெற்றியைப் பெற்றிருந்தது. தற்போது, 2ஆவது போட்டியிலும் வென்று, பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பினை சிறப்பாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
