சென்னை மாநகர மேயர் பிரியா, தவெகவினருக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும், தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவிலும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், யாழ் மைந்தன் என்ற சமூகவலைத்தளப் பக்கத்தில் தன்னை பற்றி ஆபாசமாக பதிவு வெளியிடுவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்று சமூக வலைத்தளங்களில் தன்னை இழிவுப்படுத்துவதாகவும் தன்னுடைய கருத்துகளுக்கு கருத்துகள் ரீதியாக பதிலளிக்காமல் ஆபாசமாகப் பதிவு செய்து பெண்களை இழிவுப்படுத்துகின்றனர் என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தார். எனவே இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட மேயர் பிரியா, “நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை பற்றி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாக தொடர்ந்து பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா? ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாதா? மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு, Virtual abusers உருவாக்குவது நியாயமா?
என்மீது, தொடுக்கப்பட்ட அத்தனை, ஆபாச, கேலி இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்? கொள்கை ரீதியாக எதிர்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்? த.வெ.க வை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் மாண்பு உள்ளதா? இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்க கூடாது என்பது தான் த.வெ.க. அரசின் நிலைபாடா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
