திருப்பூர்: ‘தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது. ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த ஸ்டாலின் குடும்பமும் தமிழகத்தில் ஊழலில் ஈடுபடுகிறது. தேர்தலில் தே.ஜ., கூட்டணி வெற்றிபெற்று, நல்லாட்சி அமையும்’ என, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் திருப்பூரில் தெரிவித்தார்.
தே.ஜ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பீயூஷ் கோயல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். நேற்று திருப்பூர் வந்த பீயூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு, திருப்பூரின் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்திவருகிறது. ஒன்பது நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்வாயிலாக, உலக அளவில் மிகப்பெரிய 38 நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும். திருப்பூர் உள்பட இந்திய தொழில் துறையினருக்கு, உலகளாவிய சந்தை வாய்ப்புகளின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு
தமிழகத்தில், எல்லாவகையிலும்தி.மு.க., தலைமையிலான ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது. லாக் அப் மரணங்கள், பாலியல் வன் கொடுமைகள், முதியோர் கொலைகள் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., விடமிருந்து, நமது குழந்தைகளை, எதிர்கால தலைமுறையினரை காப்பாற்றவேண்டியது நமது கடமை.
முதலீடு வரவில்லை
ரூ.12 லட்சம் கோடிக்கு அன்னிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். தமிழகத்துக்கு எந்த முதலீடுகள் வரவில்லை என்பதே உண்மை. ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், கனிமொழி என, ஒட்டுமொத்த ஸ்டாலின் குடும்பமும்தான் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைக்குள் வைத்து, ஊழலில் ஈடுபடுகிறது. மது, மணல், நிலம், வேலைவாய்ப்பு, ஒப்பந்தங்கள், மின்சாரம் என அனைத்திலும் ஊழல் அதிகரித்துவிட்டது.
சவால் விடுகிறேன், தமிழகத்தில் கஞ்சா உள்பட போதை பொருள் இல்லை என, சுகாதார அமைச்சரால் கூறமுடியுமா? ஸ்டாலின் வேண்டாம்; தி.மு.க., வேண்டாம் என்பதே தமிழக மக்களின் கோஷமாக உள்ளது. மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம், வளர்ச்சி, சட்ட ஒழுங்கு, ஊழலற்ற ஆட்சியைத்தான். தி.மு.க., வால், அதை கொடுக்க முடியாது. தமிழகத்திலிருந்து தி.மு.க. குடும்ப ஆட்சியை ஒட்டுமொத்தமாக துடைத்தெறியவேண்டும்.
அடுத்து உதயநிதியை முதல்வராக்கமாட்டேன் என, மக்கள் மன்றத்தில் ஸ்டாலின் கூறுவாரா? உண்மையில் இவர்கள்தான், தமிழ் சமூகம், கலாசாரத்துக்கு எதிரானவர்கள்.
மெகா தொழில் பூங்கா
சட்டசபை தேர்தலில் தே.ஜ. கூட்டணி வெற்றிபெற்று, தமிழகத்தில் சிறந்த ஆட்சி அமைக்கப்படும். ஊழலற்ற, வெளிப்படைத்தன்மையான ஆட்சி அமையும். தொழில் வாய்ப்புகள், முதலீடுகள் பெருகும்; லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். நாட்டின் பின்னலாடை நகரான திருப்பூரை சுற்றிலும், பெரிய அளவிலான தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
நடிப்பை மட்டும் பாருங்க
விஜய் அமிதாப்பச்சன், ஷாரூக்கான் போன்ற நடிகர்கள் வரும்போது, ரசிகர்கள், வீட்டு மாடியிலிருந்து பார்த்து ரசிப்பார்கள். நடிகர்கள், அவர்களுக்கான வேலையை மட்டும் பார்க்கவேண்டும். விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். வெறும் நடிப்புத்திறனை மட்டும் வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க முடியாது. ஆளுமைத்திறன் அவசியம். அது, பழனிசாமியிடம்தான் உள்ளது. தேர்தலில் வெற்றிபெற்று,பழனிசாமி தலைமையில் தமிழகத்தில், மீண்டும் ஜெ., வழங்கிய நல்லாட்சி அமையும்.இவ்வாறு, அவர் கூறினார்.
அவிநாசி பா.ஜ. வேட்பாளர் முருகன், திருப்பூர் தெற்கு பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ், திருப்பூர் வடக்கு அ.தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
