– நமது சிறப்பு நிருபர் –
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில், 616 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அவற்றில், உரிய ஆவணங்கள் இல்லாத 173 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல், 24 பேர், வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். இறுதியாக, 419 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
அதிகபட்சமாக த.வெ.க., தலைவர் ஜோசப் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், அவரையும் சேர்த்து 47 பேர் போட்டியில் உள்ளனர். இதில், இரண்டு ஜோசப், இரண்டு விஜய் உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்துார் தொகுதியில், அவருக்கு எதிராக 34 பேரும்; அவரது மகன் உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில், அவருக்கு எதிராக 25 பேரும் போட்டியிடுகின்றனர்.
மேலும், அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக 22 பேர் போட்டியிடும் நிலையில், குறைந்தபட்சமாக அமைச்சர் சுப்பிரமணியன் போட்டியிடும் சைதாப்பேட்டை தொகுதியில் 15 பேர் களத்தில் உள்ளனர்.
சென்னை மாவட்டத்திலேயே குறைந்த எண்ணிக்கை வேட்பாளர்கள் மோதும் தொகுதியாக சைதாப்பேட்டை உள்ளது . சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன் சேர்த்து 15 பேர் களத்தில் உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் சீமான் போட்டியிடும் காரைக்குடியில் 25 பேரும், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் சாத்துாரில் 22 பேரும் களத்தில் உள்ளனர்.
