சிக்கமகளூரு: கடந்த நான்கு நாட்களுக்கு முன், கர்நாடகாவின் சந்திரதுரோண மலைத்தொடர்ச்சியில் காணாமல் போன, கேரள சிறுமியின் உடல் 2,000 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவி ஸ்ரீநந்தா, 15, தன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அடங்கிய, 40 பேர் குழுவுடன், சிக்கமகளூரு மாவட்டத்துக்கு சுற்றுலா வந்திருந்தார்.
ஏப்., 7ம் தேதி மாலை 6:00 மணியளவில், பிரசித்தி பெற்ற சந்திரதுரோண மலைத்தொடர்ச்சிக்கு சென்றனர்.
மாணிக்யதாரா நீர்வீழ்ச்சி அருகே, சிறுமி திடீரென காணாமல் போனார். அவர் காணாமல் போன சில நிமிடங்களுக்கு முன், தந்தையின் மொபைல் போனில், ‘ரீல்ஸ்’ எனப்படும், குறும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அதன்பின் அவரை காணவில்லை.
மகளை காணாமல் கலக்கம் அடைந்த பெற்றோரும், உறவினர்களும் தேட துவங்கினர். பல இடங்களில் தேடியும் தென்படாததால், போலீசாரின் உதவியை நாடினர்.
போலீசாரும், வனத்துறை மற்றும் தீயணைப்பு படையினருடன் சிறுமியை தேடினர். தனித்தனி குழுக்களாக செங்குத்தான மலைப்பகுதியில், கயிற்றின் உதவியுடன் தேடினர். சிறப்பு ட்ரோன் கேமரா பயன்படுத்தி தேடினர். மூன்று நாட்களாக தேடியும் எந்த தகவலும் தெரியவில்லை.
நேற்று மதியம் ட்ரோன் மூலமாக தேடும் போது, சந்திரதுரோண மலையின், 2,000 அடி ஆழத்தில் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ட்ரோன் கேமராவில், சிறுமியின் உடல் தென்பட்ட பின், மீட்பு படையினர் அங்கு சென்று, அது காணாமல் போன ஸ்ரீநந்தா தான் என்பதை உறுதிப்படுத்தினர். 2,000 அடி ஆழத்தில் இருந்து உடலை மேலே கொண்டு வருவது மீட்பு படையினருக்கு, பெரும் சவாலாக இருந்தது.
சிறுமி மலையில் இருந்து இறங்கும் போது, கால் தவறி விழுந்தாரா, தற்கொலையா அல்லது கொலையா என்பது தற்போதைக்கு தெரியவில்லை. சிக்கமகளூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
