பவுமா சதம்: மீண்டது தென் ஆப்ரிக்கா: ஆஸ்திரேலிய பவுலர்கள் ஏமாற்றம்

கெபேஹா: கேப்டன் பவுமா சதம் கைகொடுக்க, தென் ஆப்ரிக்கா அணி சரிவில் இருந்து மீண்டது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் கெபேஹாவில் நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் இரண்டு நாளில், முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 97/5 ரன் எடுத்திருந்தது. கேப்டன் பவுமா (41), முல்டர் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்டார்க் ‘வேகத்தில்’ முல்டர் (13) அவுட்டானார். அடுத்து பவுமாவுடன் இணைந்தார் யான்சென். ஒரு பக்கம் பவுமா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, யான்சென், பவுண்டரிகளாக விளாசினார். ஸ்டார்க் பந்தில் பவுண்டரி அடித்த பவுமா, 140 பந்தில் அரைசதம் எட்டினார்.

இவருக்கு ‘கம்பெனி’ கொடுத்த யான்சென், 43 பந்தில் அரைசதம் விளாசினார். 7வது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்த போது, யான்சென் (85) போலண்ட் பந்தில் அவுட்டானார்.

பவுமா அபாரம்

மனம் தளராமல் போராடிய பவுமா, கம்மின்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, டெஸ்ட் அரங்கில் 5வது சதம் (226 பந்து) கடந்தார். இவருடன் இணைந்த சைமன் ஹார்மரும், தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். தென் ஆப்ரிக்க அணி சரிவில் இருந்து மீண்டது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 411/7 ரன் எடுத்திருந்தது. 8வது விக்கெட்டுக்கு 183 ரன் சேர்த்த போது, ஹார்மர் (82) அவுட்டானார். பவுமா 179 ரன்னில் ஸ்டார்க் பந்தில் வீழ்ந்தார். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 425/9 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 5 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 0/1 ரன் எடுத்திருந்தது.

450 விக்கெட்

நேற்று முல்டரை அவுட்டாக்கிய ஸ்டார்க், டெஸ்ட் அரங்கில் 450 விக்கெட் (109 போட்டி) என்ற மைல்கல்லை எட்டினார்.

* டெஸ்ட் அரங்கில் குறைந்த பந்துகள் அடிப்படையில் 450 விக்கெட் சாய்த்தவர்களில் ‘நம்பர்–1’ பவுலர் ஆனார் ஸ்டார்க் (20,577 பந்து). மெக்ராத் (23,474, ஆஸி.,) இரண்டாவதாக உள்ளார்.

* போட்டிகள் அடிப்படையில், இந்த இலக்கை அடைந்த பவுலர்களில், முரளிதரன் (80 டெஸ்ட், இலங்கை), அஷ்வின் (89, இந்தியா), கும்ளே (93, இந்தியா), மெக்ராத் (100, ஆஸி.,), வார்னுக்கு (101, ஆஸி.,) அடுத்த இடம் பிடித்தார் ஸ்டார்க் (109).

* வார்ன் (708), லியான் (573), மெக்ராத்திற்கு (563) அடுத்து, டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்த ஆஸ்திரேலிய பவுலர் ஆனார் ஸ்டார்க்.

Source link