இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 25% உயரும்: ஐ.டி.எப்., நம்பிக்கை

கோவை: இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, வரும் நிதியாண்டில் 25 சதவீதம் வளர்ச்சியை எட்ட வாய்ப்புள்ளதாக, ஐ.டி.எப்., எனப்படும் இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு 140 கோடி டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடை ஏற்றுமதியாகிறது. போர் பதற்றம், அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்டவற்றால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.

ஜன., – ஆகஸ்டில், அமெரிக்காவுக்கான இந்தியா ஆயத்த ஆடை ஏற்றுமதி 26.44 சதவீதம் சரிந்துள்ளது. இந்தியாவுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கு 29.39 சதவீதம், வங்கதேசத்துக்கு 4.43 சதவீதம் ஏற்றுமதி சரிந்துள்ளது.

அமெரிக்க ஆயத்த ஆடை இறக்குமதி சந்தையில், இந்தியாவின் பங்கு 6 சதவீதமாக இருந்தது. அது 4 சதவீதமாக குறைந்துள்ளது. செப்டம்பரில் இருந்து சந்தை இயல்பு நிலைக்கு திரும்ப துவங்கியுள்ளது.ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு புதிய வரி இருக்காது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இது ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐ.டி.எப்., கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:

இந்தியா – பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்த, நம் ஏற்றுமதியாளர்கள் லண்டனில் அலுவலகங்கள், டிசைன் ஸ்டூடியோக்கள் அமைக்கிறார்கள்.

வரும் காலாண்டிலிருந்து ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்தியா, ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் வரும் நிதியாண்டில் நடைமுறைக்கு வந்தால், ஆயத்த ஆடை ஏற்றுமதி இரட்டை இலக்க வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link