பருவமழை நேரத்தில் சொந்த ஊர் பயணம்; நீர்வளத்துறை அதிகாரிகள் செயலால் சர்ச்சை

சென்னை: பருவமழை நேரத்தில், நீர்வளத்துறை அதிகாரிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீர்வளத்துறை வாயிலாக, சென்னையில் அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு உள்ளிட்ட பிரதான நீர்வழித்தடங்கள் பராமரிக்கப்படுகின்றன. பருவமழை காலங்களில், இவற்றில் நீரோட்டத்தை பாதிக்காத வகையில் துார் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நடப்பாண்டு இப்பணிக்கு, 40 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, முறையாக துார் வாரும் பணிகள் மேற்கொள்ளவில்லை. முகத்துவாரங்களில் முறையாக அடைப்பு நீக்கும் பணிகள் நடக்கவில்லை என புகார் எழுந்தது. இதனால், கடந்த 17ம் தேதி கொட்டி தீர்த்த கன மழையால், சென்னையின் பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பணிகள் முடிந்து வீடு திரும்ப முடியாமல் பலரும் அவதிக்குள்ளாகினர். துார் வாரும் பணிகள், முகத்துவாரத்தில் அடைப்பு நீக்கும் பணிகளை முறையாக செய்திருந்தால், வெள்ளநீர் வேகமாக வடிந்திருக்கும். இப்பணிகளை கண்காணிப்பதற்காக, ஒவ்வொரு நீர்வழித் தடங்களுக்கும் உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முதன்மை தலைமை பொறியாளர், மண்டல தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பருவ மழை நேரங்களில், இவர்கள் பணிபுரியும் மாவட்டங்களிலேயே இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், ஆயுதபூஜை தொடர் விடுமுறை காரணமாக, நீர்வளத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால், ஒப்பந்ததாரர்களுடன் பணிகளை ஒருங்கிணைப்பு செய்வதற்கு ஆளில்லை. இதேபோன்று, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், அதிகாரிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

பருவ மழை நேரத்தில் நீர்வளத்துறையில் நடந்துள்ள இச்செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெருமழை பெய்து வெள்ள பாதிப்பு அதிகரித்தால் சிக்கல்கள் ஏற்படும். எனவே, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணியில் அதிகாரிகள், பொறியாளர்கள் ஈடுபடுவதை, உறுதி செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

Source link