சமூக வலைதளத்தில் ஆபாச சித்தரிப்பு: மேயர் பிரியா புகார்

சென்னை: தன் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மேயர் பிரியா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் மாநில சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

புகாரில் கூறியிருப்பதாவது: பொதுவாழ்வில் உள்ள மக்கள் பிரதிநிதி என்ற முறையில் என் மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். ஆனால், மர்ம நபர்கள் என் படத்தைப் பாலியல் ரீதியாக ஆபாசமாகச் சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இத்தகைய பதிவுகள் ஆரோக்கியமான விமர்சனங்கள் அல்ல; பெண்களைப் பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டவை.

இந்த சம்பவம் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்பு மட்டுமல்ல; பொதுவாழ்வுக்கு வர விரும்பும் இளம் பெண்களுக்கும், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தல். இதுபோன்ற அவதுாறுப் பதிவுகளுக்குப் பின், அரசியல் எதிரிகளின் கூட்டுச் சதி இருக்கலாம் எனச் சந்தேகம் எழுகிறது. எனவே, ஆபாசப் பதிவுகளை வெளியிட்டவர்கள், அவற்றை மறுபதிவு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Source link