காங்கிரஸ் குறித்து, த.வெ.க., தலைவர் விஜய்க்கு இலவசமாக அறிவுரை வழங்கிய தே.மு.தி.க., இளைஞர் அணி செயலர் விஜயபிரபாகரன், தற்போது காங்., – எம்.பி., மாணிக்கம் தாகூரிடம் சரணடைந்துள்ளார்.
தமிழகத்தில் 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சார்பில், விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் போட்டியிட்டார். காங்., தரப்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். மாணிக்கம் தாகூர் 4,379 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து, விஜயபிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்; வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சார்பில் விஜயபிரபாகரன் விருதுநகரில் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில், எதிர் அணியில் இருந்தோருடன் கைகோர்க்க வேண்டிய நிலைக்கு, விஜயபிரபாகரன் தள்ளப்பட்டு உள்ளார். இந்த தேர்தலில், காங்., உடன் கூட்டணி அமைக்க, த.வெ.க., தலைவர் விஜய் விரும்பினார். இதற்காக, பல கட்ட ரகசிய பேச்சுக்கள் நடந்தன. ஆயினும், தி.மு.க., கூட்டணியில் காங்., இணைந்துள்ளது.
கூட்டணி பேச்சு நடந்தபோது, ‘காங்கிரஸ் கட்சியை நம்ப வேண்டாம்; அவர்கள் என்னென்ன செய்வர் என எனக்கு தெரியும். அனுபவப்பூர்வமாக விருதுநகர் தொகுதியில் நான் பார்த்துள்ளேன்’ என, விஜயபிரபாகரன் மேடைகளில், விஜய்க்கு இலவசமாக அறிவுரை கூறி வந்தார்.
இப்போது, அவரே காங்., தயவில் தேர்தலை சந்திக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார். காங்கிரஸ் ஆதரவை பெற, விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூருடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதை, த.வெ.க.,வினர் கிண்டலடித்து வருகின்றனர்.
தேர்தலில், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமானால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என, மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்கள், விஜயபிரபாகரனுக்கு நெருக்கடி தருவதாகவும், இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தவித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
