தி .மு.க.,வுக்கு இணையாக தேர்தல் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் திணறும் பா.ஜ., வேட்பாளர்கள், கட்சி நிதியுதவியை எதிர்பார்த்தபடி உள்ளனர்.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ., போட்டியிடும் 27 தொகுதிகளில், 18ல் தி.மு.க., உடன் நேரடியாக மோதுகிறது. தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், பிரசாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு கவனிப்பு, உணவு போன்றவற்றுக்கு, ஒரு ஓட்டுச்சாவடிக்கு குறைந்தது, 20,000 ரூபாய் என, ஒரு தொகுதியில் சராசரியாக 300 ஓட்டுச்சாவடிகளுக்கு, தினசரி 60 லட்சம் ரூபாய் செலவு செய்கின்றனர். அதற்கு இணையாக, அ.தி.மு.க., வேட்பாளர்களும் செலவு செய்கின்றனர்.
பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 12 பேர், தி.மு.க.,வுக்கு இணையாக செலவு செய்பவர்கள். அறந்தாங்கி, ராசிபுரம், கந்தர்வக்கோட்டை, திருவாரூர், ராசிபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்கள் வசதியாக இருந்தாலும், எதிர்தரப்பு வேட்பாளர்களுக்கு இணையாக செலவு செய்ய முடியாமல் திணறுகின்றனர்.
தினமும், பிரசாரம் செய்யும் தொண்டர்களுக்கு உணவு, போக்குவரத்து செலவு என, குறைந்தது 20 லட்சம் ரூபாய் செலவாகிறது. இனிவரும் நாட்களில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், பணத்தை தண்ணீராக செலவு செய்ய உள்ளனர்.
பூத் கமிட்டி பொறுப்பாளர்களை திருப்திப்படுத்த வேண்டும். அப்போது தான், பா.ஜ., வேட்பாளர்களின் வெற்றி, 100 சதவீதம் உறுதியாகும். எனவே, தேர்தல் செலவுக்கு, பா.ஜ., மேலிடம் நிதியுதவி செய்ய வேண்டும். அந்த நிதி முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
