தியாகராய நகரில் மழைநீர் தேக்கம் : அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!

சென்னையில் நேற்று (20.10.2026) இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழையால், பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அந்த வகையில், சென்னை தியாகராய நகரில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஆனந்த் இன்று  (21.10.2026) காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளைப் பார்வையிட்ட அவர், மழைநீர் வடிகால்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். 

மேலும், மழைநீரை விரைந்து அகற்றி, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆனந்த், “மழையால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக அழைத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளதோ, அங்கெல்லாம் மோட்டார்கள் மற்றும் பம்ப் செட்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை சுமார் 2,000 பேருக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். மேலும், பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் பகுதிகளில் மழைநீர் தேங்குவதால், அங்கு பம்ப் செட்கள் மற்றும் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், மழையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகாரிகளும் இப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.