தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகக் கடலோரப் பகுதிகளை ஒட்டி உருவாகியுள்ளதால், இன்று (21.10.2026) மற்றும் நாளை (22.10.2026) தமிழகக் கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (21.10.2026) காலை 10:00 மணிக்கு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையின்படி, இன்று மதியம் 01:00 மணி வரை தமிழ்நாட்டின் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
