நம்பிக்கை கொடுத்த ‘ஆர்டெமிஸ்-2’-பூமியை வந்தடைந்த வீரர்கள்

மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் ‘ஆர்டெமிஸ்-2’ திட்டம் தீவிரமாக நடந்து வந்த நிலையில் இதில் பங்கேற்ற விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமி திரும்பியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி நிலவை ஆய்வு செய்யும் ‘ஆர்டெமிஸ்-2’  திட்டத்திற்காக ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா கோக் (அமெரிக்கா)  ஜெரமி ஹான்சன் (கனடா) ஆகிய நான்கு பேர் கொண்ட குழு விண்வெளி சென்றது. இவர்கள் முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 6 அன்று நிலவின் பின்புறம் வழியாகப் பயணித்தனர். இதன் மூலம் பூமியிலிருந்து சுமார் 2,52,756 மைல்கள் தூரம் பயணித்து, மனித விண்வெளி வரலாற்றில் மிக நீண்ட தூரம் சென்றவர்கள் என்ற புதிய உலக சாதனையைப் படைத்தனர்.

நிலவின் பின்புறம் இவர்கள் பயணித்த விண்கலம் சென்றபோது, சுமார் 40 நிமிடங்கள் பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அப்போது நிலவின் தரைப்பரப்பை மிக நெருக்கமாக நேரில் கண்டு புகைப்படங்களை எடுத்துள்ளனர். விண்வெளியிலிருந்து நிலவு சூரியனை மறைக்கும் ஒரு அரிய சூரிய கிரகணத்தையும் இக்குழு கண்டு வியந்துள்ளது. இந்த விண்கலம் நிலவில் தரை இறங்காது என்றாலும் 2027-ல் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் அடுத்தகட்ட திட்டத்திமான ஆர்டெமிஸ்-3 திட்டத்திற்கு தேவையான தரவுகளைச் சேகரிப்பதே இதன் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 10 நாட்கள் நிலவு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஓரியன் விண்கலம் மூலம் வீரர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனர். இவ்விண்கலம் அமெரிக்காவில் பசிபிக் பெருங்கடலில் இறங்கியுள்ளது. விண்கலத்தில் இருக்கும் வீரர்களை பத்திரமாக கடற்படை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். வீரர்கள் பத்திரமாக பூமி திரும்பி இருக்கும் நிலையில் இது ஆர்டெமிஸ்-3 திட்டத்திற்கான அடுத்தகட்ட நம்பிக்கையை கொடுத்துள்ளது. 

Source link