கார்த்திக் சபேஷை பார்க்க மருத்துவமனைக்கு கிளம்பியபோது தேவா மரணம்: கடைசி நிமிடம் நடந்தது என்ன?

தேவாவுக்கு என்ன ஆனது?: தேனிசைத் தென்றல் தேவா மாரடைப்பால் மரணம் அடைந்து 5 நாட்களாகிவிட்டது. ஆனால் அவர் இறந்தது போன்றே இல்லை என ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இந்நிலையில் அவரின் தம்பி மகன் கார்த்திக் சபேஷ் நேற்று சென்னையில் காலமானார். பெரியப்பா இறந்த நான்காவது நாள் கார்த்திக் சபேஷ் மரணமா, அய்யகோ அந்த குடும்பத்தில் இப்படி அடுத்தடுத்த இழப்புகளாக இருக்கிறதே என சினிமா ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

இந்நிலையில் தன்னுடைய 12 படங்களுக்கு அற்புதமாக இசையமைத்த தேவா அவர்கள் இறந்த அன்று காலை அவர் வீட்டில் என்ன நடந்தது என நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார் இயக்குநரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார். அவர் கூறியதாவது, சபேஷ் மகன் மருத்துவமனையில் இருக்கிறான். அவனை போய் பார்க்க வேண்டும் என்று காலையில் ஷேவ் செய்திருக்கிறார். அதன் பிறகு காபி கொடுங்கள் என கேட்டுள்ளார்.

காபி கொண்டு வருவதற்குள் அப்படியே சரிந்திருக்கிறார். உடனே மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு போயிருக்கிறார்கள், இறந்துவிட்டார். அது நல்ல சாவு. அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல், தானும் வலியும் வாடாமல் இறப்பது புண்ணியம் என்பார்கள். தேவா சார் அந்த வகையில் புண்ணியம் செய்திருக்கிறார்.இங்கு இருப்பவர்களுக்கு தான் அவரின் நினைப்பு வாட்டி எடுக்கும்.

கோபமே வராது: தேவா சார் மாதிரி ஒரு ஆளை நான் பார்த்தது கிடையாது. கவிஞர்களுக்கு கோபம் வரும். அதே மாதிரி இசையமைப்பாளர்களுக்கும் கோபம் வரும். ஏ.ஆர். ரஹ்மானுக்கு 90 சதவீதம் கோபம் வராது. ஒரு 10 சதவீதம் அவரின் ஊழியர்கள் மீது கோபப்படுவார். கோபம் வந்தால் ஒரு பார்வை பார்ப்பார். அவ்வளவு தான். ஆனால் தேவா சாருக்கு அந்த கோபம் கூட வராது. இசைஞானி இளையராஜா சாருக்கு கோபம் வரும். அதை நான் பார்த்திருக்கிறேன். அவருடன் 2 படங்கள் பணியாற்றியிருக்கிறேன். தேவா சாருக்கு கோபம் வந்து பார்த்தோம் என யாரும் சொன்னது இல்லை.

ரஜினிக்கு இசை: நான் இயக்கிய 12 படங்களுக்கு தேவா சார் இசையமைத்தார். அவர் இசையை எல்லாம் யாராலும் மறக்க முடியாது. வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்களை எனக்கு கொடுத்திருக்கிறார் அவர். சூப்பர் ஸ்டார் ரஜினி டைட்டிலுக்கு பாட்ஷா படத்தில் தான் அந்த இசை வருவது ஆரம்பித்தது. பாட்ஷாவுக்கு அடுத்து முத்து படத்தில் நடித்தார் ரஜினிகாந்த் சார்.

முத்து படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி என அனிமேஷன் பண்ண டைம் இல்லை. மொத்த படத்தையே நான்கு மாதங்களில் முடித்தோம். அதனால் பாட்ஷாவில் வந்த டைட்டில் கார்டு நல்லா இருக்கே என அதில் இருந்து ஒரு ப்ரிண்ட்டை கேட்டு வாங்கி ரஹ்மானிடம் கொடுத்தேன். பாட்ஷாவில் தேவா சார் போட்ட இசையை பார்த்தேன். அதை கொடுங்கள், பார்க்கலாம், இல்லை என்றால் நாம் டைட்டில் கார்டுக்கு புது மியூசிக் போடலாம் என்றார். இசையை பார்த்துவிட்டு ஜேம்ஸ் பாண்டுக்கு போடுற இசை மாதிரி தேவா சார் போட்டிருக்கார். இதில் நான் ஒரு சில லேயர் சேர்க்கிறேன், மற்றவையை அப்படியே வைத்துக் கொள்வோம் என்றார் ரஹ்மான் என தெரிவித்தார் ரவிக்குமார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

தேவாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடந்ததில் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல். தேவா இறந்தாலும் இந்த உலகம் இருக்கும் வரை தன் தேனிசை மூலம் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link