சென்னை: தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது; கடந்த 24 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் மிகக்கனமழை பெய்துள்ளது. குறிப்பாக, 3 மாவட்டங்களில் கனமழையும், 13 மாவட்டங்களில் மிதமான மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை எம்சிஆர் நகரில் 13 செ.மீ., மழைப் பொழிவு இருந்துள்ளது.
அக்டோபர் 26 வரை வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும். அதன்பிறகு, படிப்படியாக குறையும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இயல்பை விட கூடுதல் மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. புயலாக மாற வாய்ப்பில்லை. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற தென் தமிழக மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அக்.,23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு பகுதியில் உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் இன்னும் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். கனமழைக்கு வாய்ப்பில்லை. இவ்வாறு கூறியுள்ளனர்.
