திரையுலகம் என்பது ஒரு விசித்திரமான இடம். வெற்றி பெற்றவர்கள் கொண்டாடப்பட்டு, சுற்றிலும் ஆட்களால் சூழப்பட்டு, சில நேரங்களில் கோபுரங்களில் சிம்மாசனத்தில் அமர்த்தப்படும் அதே வேளையில், பெரும் வெற்றியை அடையத் தவறியவர்கள், திரையுலகை விட்டு முதன்முறை விலகும்போதே பெரும்பாலும் கவனிக்கப்படாமலும் மறக்கப்பட்டும் போகிறார்கள்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
சினிமாத் துறையில் தடம் பதிப்பதே எவ்வளவு கடினமோ, அதே அளவிற்கு அங்கு ஒரு தொழிலைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதும் சவாலானது. இருப்பினும், தமிழ் நடிகை மோனல் நாவல் தனது அறிமுகத்தின் தொடக்கத்திலேயே விரைவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்தி திரைப்படம் உட்பட ஒரு சில படங்களில் நடித்திருந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக, அவரது வளர்ச்சி சட்டென்று முடிவுக்கு வந்துவிட்டது.
2002-ம் ஆண்டுஅ மோனல் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணத்தைச் சுற்றி இன்றும் ஒரு மர்மம் நீடிக்கிறது. உயிரிழந்தபோது மோனலுக்கு 21 வயது மட்டுமே. இவர் பிரபல நடிகை சிம்ரனின் தங்கையாவார்.
டெல்லியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மும்பையில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரி காலத்தில், மோனல் மாடலாகப் பணியாற்றினார், பேஷன் ஷோக்களில் பங்கேற்றார், மேலும் அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு இறுதியில் ‘மிஸ் பாம்பே’ பட்டத்தையும் வென்றார். இதுவே அவர் சினிமாவிற்குள் நுழைவதற்கான வழியை அமைத்துக் கொடுத்தது. அவர் மும்பையில் உள்ள கிஷோர் நமித் கபூர் அகாடமி என்ற நடிப்புப் பள்ளியிலும் பயின்றார். சிம்ரன் தவிர, அவருக்கு ஜோதி மற்றும் சுமீத் என்ற மேலும் இரு உடன்பிறப்புகளும் இருந்தனர்.
ஷாருக்கானுடன் நடிக்க வேண்டும் என்ற மோனல் நாவலின் கனவு
அமிதாப் பச்சன், ஷாருக்கான், மதுபாலா ஆகியோரின் சிறந்த ரசிகையான மோனல் நாவல், திரையுலகில் நுழையும் போது வைத்திருந்த மிகப்பெரிய கனவு பாலிவுட்டின் பாட்ஷாவுடன் என்றாவது ஒரு நாள் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே. “நான் ஷாருக்கானால் தான் படங்களில் நடித்தேன்!
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது, ஷாருக்கானுடன் ஒரு படத்தில் நடிக்க விரும்புவதாக என் அம்மாவிடம் கூறினேன். ஆனால் திரையுலகில் நுழைந்த பிறகு தான், அந்த நிலையை அடைய நான் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். அங்கு செல்ல நான் குறைந்தபட்சம் 50 படங்களாவது செய்ய வேண்டும்,” என்று அவர் 2001-ல் ‘ரெடிஃப்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
சிவராஜ்குமார் நடித்த ‘இந்திரதனுஷ்’ (2000) படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, அதைத் தொடர்ந்து ‘பார்வை ஒன்றே போதுமே’ (2001) படம் மூலம் தமிழில் அறிமுகமானாலும், இயக்குநர் பி.ஏ.அருண் பிரசாத்தின் ‘பத்ரி’ திரைப்படம் தான் மோனலுக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இப்படத்தில் தற்போது தமிழ்நாடு முதல்வராக இருக்கும் “தளபதி” விஜய்க்கு ஜோடியாக, இரு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். பின்னர் ‘லவ்லி’ (2001), ‘சமுத்திரம்’ (2001), ‘சார்லி சாப்ளின்’ (2002) மற்றும் ‘பேசாத கண்ணும் பேசுமே’ (2002) போன்ற படங்களில் நடித்திருந்தார்.
மோனல் நாவலின் திடீர் மரணமும் சிம்ரனின் குற்றச்சாட்டுகளும்
செய்தி நிறுவனமான பி.டி.ஐ (PTI) தகவலின்படி, மோனல் ஏப்ரல் 14, 2002 அன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரது மரணத்தைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய சிம்ரன், மோனலின் முன்னாள் காதலரான பிரசன்னா என்ற நடனக் கலைஞர் தான் அவரைத் தற்கொலைக்குத் தூண்டினார் என்று குற்றம் சாட்டினார்.
அவர்கள் இருவரும் ‘லிவ்-இன்’ உறவில் இருந்ததாகக் கூறிய சிம்ரன், பிரசன்னா அந்த உறவை முடித்துக் கொண்டதால் தான் தனது தங்கை இந்த தீவிர முடிவை எடுத்ததாகக் கூறினார். மேலும், தற்கொலை பற்றி அறிந்ததும் மோனலின் வீட்டிற்கு முதலில் வந்த ஒரு பிரபல நடிகரும் அவரது மேனேஜரும் சேர்ந்து, மோனலுக்குப் பிரசன்னாவுடன் இருந்த உறவுக்கான ஆதாரங்கள் அடங்கிய தனிப்பட்ட டைரியையும், ரூ. 50,000 மதிப்பிலான மேக்கப் கிட்டையும் திருடிச் சென்றுவிட்டதாகச் சிம்ரன் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. எனவே, அவரது தற்கொலைக்கான சரியான காரணம் இன்றுவரை தெரியவில்லை. தனது தங்கையைத் தற்கொலைக்குத் தூண்டியதாகச் சிம்ரன் குற்றம் சாட்டிய பிரசன்னா, பின்னர் பல விருதுகளை வென்று மிகவும் புகழ்பெற்ற நடன அமைப்பாளரானார். ஆனால் மோனல், காலப்போக்கில் உலகத்தால் மறக்கப்பட்டார். இருப்பினும், சிம்ரன் இன்னமும் அவரை அன்புடன் நினைவுகூர்ந்து, அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் அவரது நினைவாகப் பதிவிட்டு வருகிறார்.
மோனலின் இறுதிச் சடங்கில் சிம்ரன் ஏன் கலந்து கொள்ளவில்லை?
கடந்த ஆண்டு ‘ஜே.எப்.டபிள்யூ பின்ஜ் (JFW Binge’) இதழுக்கு அளித்த பேட்டியில், தனது தங்கையின் உடலைப் பார்க்கச் சகிக்காததால் தான் மோனல் நாவலின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்று சிம்ரன் ஒப்புக்கொண்டார். “அவரை அப்படிப் பார்க்க முடியாததால் தான் நான் அவரது இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ளவில்லை. நான் சும்மாவே இறுதிச் சடங்கிற்கு வரவில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். அது காரணமல்ல. என் தங்கையை நான் எப்படி அப்படிப் பார்க்க முடியும்? அது என் தனிப்பட்ட உணர்வு. என்னால் அவரை அப்படிப் பார்க்க முடியவில்லை. என்னால் முடியவே இல்லை,” என்று வார்த்தைகள் வராமல் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.
திடுக்கிடும் விதமாக, மோனலின் முதல் மற்றும் கடைசி தமிழ்ப் படங்களான ‘பார்வை ஒன்றே போதுமே’ மற்றும் ‘பேசாத கண்ணும் பேசுமே’ ஆகிய இரண்டிலும் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகர் குணால், மோனல் இறந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு 2008 -ல் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது மறைவுக்குப் பிறகு தாமதமாக வெளியான தமிழ் த்ரில்லர் திரைப்படமான ‘ஆதிக்கம்’ (2005) மோனல் நாவலின் கடைசித் திரைப்படமாக அமைந்தது.
