சிதம்பரத்தில் தமிழக அரசைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கான்சாகிப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் கஞ்சித்தொட்டி முனை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.எம். சேகர், மாவட்டத் துணைத் தலைவர் கற்பனை செல்வம், கான்சாகிப் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். கீரை ஒன்றிய செயலாளர் புலவழகன், விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டப் பொருளாளர் ராமச்சந்திரன், முத்துக்குமாரசாமி, நலத்தம்பி, தனசேகர் ஜீவா, ஜாகிர் உசேன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கஞ்சித் தொட்டி முனை பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் பெற்ற அனைத்து வகையான கடன்களையும், கூட்டுறவுக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளையும் பொதுமக்களையும் பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கைவிட வேண்டும். சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை வீராணம் ஏரியிலிருந்து டெல்டா பாசன விவசாயிகளுக்கு உடனடியாகத் திறந்துவிட வேண்டும்.
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். ஆதனூர் – குமாரமங்கலம் தடுப்பணையில் தண்ணீரைத் தேக்கி வைத்து வடக்கு ராஜன் வாய்க்காலில் திறந்துவிட வேண்டும். வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரம் நகர போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
