‘தொடர்கதையாகும் விஜய் பவுன்சர்களின் அத்துமீறல் ‘-சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

தமிழ்நாட்டில் வருகின்ற 23ஏம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, புதிதாக களமிறங்கிருக்கும் தவெக தலைவர் விஜய் பல்வேறு இடங்களுக்குச் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று (10-04-26) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரச்சாரம் செய்ய சென்றார்.

பரப்புரையை முடித்துக்கொண்டு பிற்பகல் காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு சாலை மார்க்கமாக சென்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள், ஜனநாயகன் படம் பைரசி மூலமாக லீக்கான விவகாரம் தொடர்பாக விஜய்யிடம் கேள்வி கேட்டு மைக்கை நீட்டினர். ஆனால் விஜய், அந்த கேள்விகளை தவிர்த்துவிட்டு அமைதியாக விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது விஜய்யின் பாதுகாவலர்கள், அந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை வேகமாக தள்ளிவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர்கள், விஜய்யின் பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் பத்திரிகையாளர்களை தள்ளிவிட்டு பாதுகாவலர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், ‘திருச்சி விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் பாதுக்காப்பிற்காக அவருடன் வந்திருந்த தனியார் பாதுகாவலர்கள் (Bouncers) அங்கு கூடியிருந்த பத்திரிகையாலர்களை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதை எதிர்த்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியதுடன், தாக்கப்பாய்ந்துள்ளனர். இந்த நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு வழங்கவும் காவல்துறையினர் இருக்கும்போது, விஜய் அவர்களின் தனியார் பாதுகாவலர்கள் தங்களை காவல்துறையினராக கருதிக்கொண்டு இதுபோன்ற அத்துமீறிய செயலில் ஈடுபவது தொடர்கதையாகியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை காவல்துறையையே அவமானப்படுத்தும் செயலாகும். இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே, பத்திரிகையாளர்களிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட அந்த தனியார் பாதுகாவலர் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. தனியார் பாதுகாவலர்கள் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடக்கூடாது என்று தவெக தலைவர் விஜய், அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link