ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜிவி பிரகாஷ், அனிருத்!

பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட் செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்க நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட ரூ.800 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் கே.ஜி.எஃப் யஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். மேலும் சன்னி தியோல் அனுமான் கதாபாத்திரத்திலும் ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகை கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகள் வென்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றனர். இப்படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. கடந்த ஜூலையில் வெளியான படத்தின் முதல் டிரெய்லர் வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் உள்ளிட்ட காட்சிகள் எதிர்பார்த்த அளவு இல்லாததாக விமர்சனங்கள் எழுந்தது. பின்பு அண்மையில் வெளியான புது டிரெய்லர் அந்த விமர்சனங்களை சரி செய்தது. 

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் பட புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. இதனிடையே படத்தில் இருந்து ‘ராவணா தாண்டவம்’ எனும் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலி ராவண கதாபாத்திரத்தின் பலத்தை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் அனிருத் இருவரும் ஒன்றாக இணைந்து பாடியுள்ளனர். இதற்கு முன்னதாக இருவரும் சூர்யா நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’(2022) படத்தில் ‘வாடா தம்பி’ பாடலை பாடியிருந்தனர். இப்பாடலுக்கு இமான் இசையமைத்திருந்தார். இதையடுத்து ராமாயணா படத்துக்கு இணைந்துள்ளனர். இம்முறை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இருவரும் பாடியுள்ளதால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.