நாட்டில் மின் கட்டமைப்பு விரிவாக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மற்றும் டேட்டா சென்டர்களின் தேவை அதிகரிப்பால், நடப்பு நிதியாண்டில் ஜெனரேட்டர், டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்சார கட்டுப்பாட்டு கருவிகளின் உற்பத்தி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான, சி.எம்.ஐ.இ., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2026–27 நிதியாண்டில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மர் மின்சாரக் கட்டுப்பாட்டுக் கருவிகள் உற்பத்தி அனைத்தும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் டிரான்ஸ்பார்மர் உற்பத்தி 16.90 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிப்பு
மின் உற்பத்தி நிலையங்கள், துணை மின் நிலையங்கள் மற்றும் மின்பகிர்மானக் கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் பணிகளால் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்சார கட்டுப்பாட்ட கருவிகளுக்கான தேவை அதிகரிக்கும்.நாட்டின் மின் பரிமாற்றக் கட்டமைப்பு, கடந்த ஜூன் மாத நிலவரப்படி 5.09 லட்சம் சர்க்யூட் கி.மீ., ஆக உள்ளது. இதை 2032ம் ஆண்டுக்குள் 6.48 லட்சம் சர்க்யூட் கி.மீ., ஆக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சூரிய மற்றும் காற்றாலை மின்சார திட்டங்களை மின் கட்டமைப்புடன் இணைக்கவும் கூடுதல் உபகரணங்கள் தேவைப்படுகின்றன.
டேட்டா சென்டர்கள் விரிவாக்கம்
டேட்டா சென்டர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் தடையற்ற மின்சாரத் தேவையால் ஜெனரேட்டர்களுக்கான ஆர்டர்கள் அதிகரிக்கும்.
நாட்டின் டேட்டா சென்டர்களின் நிறுவப்பட்ட திறன், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1,570 மெகாவாட்டாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் 2,000 மெகாவாட்டை நெருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி வளர்ச்சி
உபகரணம் : 2025–26 : 2026–27 (மதிப்பீடு) : வளர்ச்சி
ஜெனரேட்டர்கள் (மெகாவாட்) : 26,575.4 : 29,063.7 : 9.36%
டிரான்ஸ்பார்மர்கள் (எம்.வி.ஏ.) : 4,13,473.4 : 4,59,604.4 : 11.16%
மின்சாரக் கட்டுப்பாட்டுக் கருவிகள் (கோடி எண்ணிக்கை) : 41.31 : 44.13 : 6.83%
