புதுடில்லி:
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததை அடுத்து, சைபர் பாதுகாப்பு பிரிவு விசாரணையை வங்கி தொடங்கியுள்ளது.
அக். 16ல், வாடிக்கையாளர்களின் தரவுகள் டார்க் வெப்பில் வெளியாகியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து, இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழு உள்ளிட்ட சைபர் பாதுகாப்பு முகமைகள் வங்கி நிர்வாகத்தை எச்சரித்தன.
டார்க் வெப்பில் கண்டறியப்பட்ட சுமார் 3.75 லட்சம் பதிவுகளை ஆய்வு செய்ததில், முதற்கட்டமாக 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்தது உறுதியானது.
வாடிக்கையாளர்களின் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, பாலினம், இ-மெயில், வீட்டு முகவரி, வாடிக்கையாளர் அடையாள எண் மற்றும் கடன் தொடர்பான விவரங்கள் போன்றவை கசிந்ததை வங்கி உறுதி செய்தது. தகவல்கள் எங்கு இருந்து கசிந்தன, அவற்றின் உண்மைத்தன்மை என்ன, வேறு எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இதற்காக, முன்னணி தனியார் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் உதவியையும் வங்கி நாடியுள்ளது.
எஸ்.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில்:
தகவல் கசிவு சம்பவத்தால் வங்கியின் முக்கிய செயல்பாடுகள், நிதிநிலை மற்றும் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. வங்கியின் வழக்கமான செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுகின்றன. வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றன என தெரிவித்தது.
