”மின்னல் வேகத்தில் எஸ்கேப் ஆன கணவன்”; நடு ரோட்டில் தத்தளித்த மனைவி

காவல்துறையினரின் வாகன சோதனையின் போது மனைவி கீழே விழுந்ததையும் கண்டுகொள்ளாமல் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்ற கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

உத்தரகாண்ட் மாநிலம், உதம் சிங் நகர் மாவட்டம், ருத்ராபூர் பகுதியில் உள்ள த்ரிசூல் சௌக் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முறையான நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களைக் குறிவைத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.  

அந்த சமயத்தில், தனது மனைவியை வாகனத்தில் அழைத்துக்கொண்டு வாகன ஓட்டி ஒருவர் அந்த வழியாக வந்தார். அவர் அங்குச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்களைக் கண்டதும் வேகமாக வண்டியைத் திருப்பினார். அப்போது, இந்த எதிர்பாராதா திடீர் திருப்பத்தால் நிலைகுலைந்து போன மனைவி சாலையில் விழுந்தார். மனைவி விழுந்ததைபற்றி கவலைப்படாமல், காவல்துறையினரிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற நோக்கத்தில் அவர் வாகனத்தில் வேகமாகச் சென்றுவிட்டார்.  

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் உடனடியாக அப்பெண்ணைப் பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாக அவருக்குப் பெரிய அளவிலான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.  இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனிடையே, மனைவியை நடு ரோட்டில் ஆபத்தான நிலையில் விட்டுச்சென்ற கணவனைப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  

அதே நேரத்தில், போக்குவரத்து விதிகளை மீறுவதும், காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க நினைப்பதும் எந்தளவுக்கு ஆபத்தானது? என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்