TN vs UTK – இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்ற தமிழ்நாடு அணி: 10 விக்கெட்களை எடுத்து அசத்திய பௌலர் – tamil nadu team beat uttarakhand team by innings and 66 runs in ranji trophy 2026 match

ரஞ்சிக் கோப்பை 2026 தொடரின் லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் ஆகிய அணிகள் மோதின. சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

உத்ரகாண்ட் அணி இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய உத்தரகாண்ட் அணியில், அவ்னீஷ் சுதா மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினார். இவர், 103 பந்தில் 54 ரன்களை அடித்த நிலையில், மயங்க் மிஸ்ரா 114 பந்தில் 33 ரன்களை சேர்த்தார். மற்ற எந்த பேட்டரும், 15 ரன்களை கூட தாண்டவில்லை. இறுதியில், உத்தரகாண்ட் அணி, முதல் இன்னிங்ஸில் 134/10 ரன்களை மட்டுமே எடுத்தது.

தமிழக அணி பௌலர்கள் குர்ஜாப்னீத் சிங் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்கள்.

தமிழ்நாடு இன்னிங்ஸ்: அடுத்து, முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய தமிழ்நாடு அணியில், ஒன்னவுன் பேட்டர் பிரதோஷ் பௌல் 279 பந்தில் 136 ரன்களை குவித்து அசத்தினார். மேலும், இந்திரஜித்தும் 217 பந்துகளில் 77 ரன்களை எடுத்து ஸ்கோரை உயர்த்தியதால், தமிழ்நாடு அணி, 313/10 ரன்களை எடுத்து, 179 ரன்கள் முன்னிலை பெற்றது.

தமிழ்நாடு அணி வெற்றி: 179 ரன்கள் பின்தங்கியதுடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய உத்ரகாண்ட் அணி, முதல் இன்னிங்ஸில் சொதப்பியதுபோலவே, இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பியது.

இரண்டாவது இன்னிங்ஸில், எந்த பேட்டரும் 30 ரன்னை கூட தொடரவில்லை. இறுதியில், உத்ரகாண்ட் அணி, 45.4 ஓவர்களிலேயே 113/10 ரன்களை மட்டும் எடுத்து, இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

சாய் கிஷோர், அபாரமாக பந்துவீசி, 16 ஓவர்களில் 34 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். மேலும், அஜித் ராமும் சிறப்பாக ஆடி, 15.4 ஓவர்களில் 33 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார்.

சாய் கிஷோர், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் என இப்போட்டியில், 10 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இப்போட்டியில், வென்ற தமிழ்நாடு அணி, குரூப் டி பிரிவில் 8 அணிகள் கொண்ட தரவரிசையில், 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாடு அணி, முதல் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய நிலையில், இறுதியில் ஆட்டம் டிரா ஆனது.

குரூப் டி பிரிவில் ஹரியானா மற்றும் மும்பை அணிகள், தலா 2 வெற்றிகளை பெற்று, முதல் இரண்டு இடங்களில் இருக்கிறது. குரூப் டி பிரிவில், இன்னமும் ராஜஸ்தான், ரயில்வேஸ், உத்ரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் சண்டிகார் ஆகிய அணிகள் வெற்றி கணக்கை துவங்கவில்லை.

தமிழ்நாடு அணி, அடுத்த லீக் போட்டியில், ரயில்வேஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இப்போட்டி, அக்டோபர் 26ஆம் தேதி துவங்கும்.

தமிழ்நாடு அணி, 1955, 1988 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. 12 முறை பைனலுக்கு முன்னேறி, 10 முறை கோப்பையை வெல்ல முடியவில்லை. கடைசியாக, 2015ஆம் ஆண்டில்தான் பைனல் வரை முன்னேறியிருந்தனர். அதன்பிறகு, பைனலுக்கு முன்னேற முடியாத நிலைமைதான் இருக்கிறது.

Source link