கரூர்: ஆசிரியர் வீட்டில் 32 பவுன் நகை திருட்டு; காவல் நிலையம் அருகிலேயே அதிர்ச்சி சம்பவம்

கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி நகர் பகுதியில் தர்மராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த 19-ம் தேதி தனது உறவினரைப் பார்ப்பதற்காக குடும்பத்துடன் பெங்களூருக்குச் சென்றுள்ளார். அதன்பிறகு, இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் குடும்பத்துடன் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 32 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

robbery

இதையடுத்து, வீட்டிற்கு எதிரே உள்ள தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடயவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் தடயங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தான்தோன்றிமலை காவல் நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link