‘புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு’-வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை பேட்டி

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ”தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலிமை குறைவானதாக இருக்கிறது. வலுப்பெறும் வாய்ப்பு குறைவு. நவம்பர் மாதத்தில் ப்ரெடிக்ஷன் மழையின் அளவு எபோவ் நார்மல் என்றுதான் காமிக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

வரும் அக்டோபர் 25ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. 23ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெறும் வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது. 24ஆம் தேதி வாக்கில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர உள்ளது. தமிழகத்திற்கு இப்போதைக்கு பாதிப்புகள் கிடையாது. புயலாக மாறினால் அதன் தாக்கம் தமிழ்நாட்டிற்கு தற்போதைய கணக்கின்படி குறைவாகவே இருக்கும்” என்றார்.