சாலையோர உணவு வியாபாரிகளின் விற்பனையை மேம்படுத்தும் வகையில், சூரிய சக்தியில் இயங்கும் புதிய உணவு விற்பனை வண்டியை ஐ.ஐ.டி., காரக்பூர் உருவாக்கியுள்ளது.
மூன்று சக்கர வாகன வடிவில் உருவாக்கப்பட்ட இந்த வண்டியில் சூரிய மின்சாரம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, பொருட்களை காட்சிப்படுத்தும் வசதி மற்றும் கழிவுகளை மூன்று வகையாக பிரிக்கும் அமைப்பு இடம்பெற்றுள்ளது. ஒரே இடத்தில் வியாபாரம் செய்ய வேண்டிய தேவை இல்லாமல், வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு வண்டியை கொண்டு செல்ல முடியும். வியாபாரம் முடிந்ததும் வண்டியை வீட்டுக்கு எடுத்துச் செல்லவும் முடியும். இதனால் பொது இடங்களில் நிரந்தரமாக வண்டியை நிறுத்த வேண்டிய தேவை குறையும்.
ஐ.ஐ.டி., காரக்பூர் வளாகத்தில் நடைபெற்ற ‘நகர் உத்யம் – சாலையோர வியாபாரியிலிருந்து ஸ்மார்ட் தொழில்முனைவோர் வரை’ என்ற நிகழ்ச்சியில் இந்த வண்டி அறிமுகம் செய்யப்பட்டது. சோதனை கட்டத்தில், இந்த வண்டி ஐ.ஐ.டி., காரக்பூரின் ‘செது கிளவுட் கிச்சன் கனெக்ட்’ தளத்துடன் இணைக்கப்பட உள்ளது. இதன் வாயிலாக வியாபாரிகளுக்கு டிஜிட்டல் அடையாளம், கியூ.ஆர்., பணப்பரிவர்த்தனை, பயிற்சி மற்றும் விற்பனை கணக்கு பதிவுகளை பராமரிக்கும் வசதி கிடைக்கும் என ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.
‘வியாபார வாய்ப்புகளை அதிகரிக்கும்’
சாலையோர வண்டியின் வடிவத்தை மாற்றுவது மட்டும் இந்த முயற்சியின் நோக்கம் அல்ல. வாடிக்கையாளர் தேவை உள்ள இடத்துக்கு சென்று வியாபாரம் செய்வது, சுத்தமான எரிசக்தியை பயன்படுத்துவது, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்வது ஆகியவை வியாபாரிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்.
– சுமன் சக்ரவர்த்தி, இயக்குனர், ஐ.ஐ.டி., காரக்பூர்
