புதுடில்லி: டில்லியில், நவ., 14 முதல் காற்று பலுான் சவாரி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டில்லியில் வெப்பநிலையை அடிப்படையாக கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் வெப்பத்தால் இயங்கும் பலுான் சவாரிகள் நடத்தப்படுகின்றன. கடந்தஆண்டு யமுனா விளையாட்டு வளாகம், காமன்வெல்த் விளையாட்டு வளாகங்கள், மற்றும் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அசிதா மற்றும் பான்சீரா ஆகிய பூங்காக்களில் வெப்பக்காற்று பலுான் சவாரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டன. இருந்தாலும், பன்சீரா பூங்காவில் மட்டும் வெப்பகாற்று பலுான் சவாரிகள் நடந்தன. இதில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணியிர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இவ்வாண்டும், நவம்பர் 14 முதல் வெப்ப காற்று பலுான் சவாரிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, டில்லி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாது:
தற்போது, வானிலை மிகவும் சாதமாக உள்ளது. எனவே, கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் நவம்பர் மாதம் வெப்ப காற்று பலுான் சவாரிகள் நடக்கும். இதை தனியார் நடத்துவர். அதிகளவில் சுற்றுலா பயணியரை கவரும் வகையில், இந்த ஆண்டு இதற்கான கட்டணம் குறைக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. கடந்த முறை ஒரு நபருக்கு 2,300 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இவ்வாண்டு, இந்த கட்டணம் குறையும்.
வெப்ப காற்று புலான் சவாரி 7 முதல் 12 நிமிடங்கள் வரை நீடிக்கும். ஒரு பலுானில் நான்கு பேர் பயணிக்கலாம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
