நமது சிறப்பு நிருபர்சந்தனக்கட்டை கடத்தல் வீரப்பன் மகள் மேட்டூர் தொகுதியிலும், மனைவி கிருஷ்ணகிரி

நமது சிறப்பு நிருபர்

சந்தனக்கட்டை கடத்தல் வீரப்பன் மகள் மேட்டூர் தொகுதியிலும், மனைவி கிருஷ்ணகிரி தொகுதியிலும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

1990களில் சந்தனக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட வீரப்பன், போலீஸ் , வனத்துறை அதிகாரிகளை கொன்று கொடூர குற்றவாளியாக வலம் வந்தான். அவனைப் பிடிக்க தமிழகம் மற்றும் கர்நாடக மாநில போலீசார் இணைந்த கூட்டு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. இந்தப் படையினரின் நீண்ட கால முயற்சிக்குப் பிறகு 2004ம் ஆண்டு வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு 20 ஆண்டு கடந்த நிலையில், அவனது மகளும் மனைவியும் தேர்தல் அரசியலின் வாயிலாக, வீரப்பனின் வரலாற்றை மறுவரையறை செய்ய முயன்று வருகின்றனர். அச்சமூட்டும் ஒரு குற்றவாளி என்ற பிம்பத்திலிருந்து, தமிழ் உரிமைகளின் பாதுகாவலராக வீரப்பனை சித்தரிக்க இவர்கள் முற்படுகின்றனர். வீரப்பனின் மூத்த மகளான 35 வயதான வழக்கறிஞர் வித்யாராணி, மேட்டூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

அதேவேளையில், வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமி, கிருஷ்ணகிரி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தேர்தல் களத்தில் உள்ளார். இவ்விரு கட்சிகளுமே தமிழ் தேசியக் கொள்கையை முன்னிறுத்திச் செயல்படுபவை ஆகும். முன்னதாக, 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட வித்யாராணி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.

முத்துலட்சுமியைப் பொறுத்தவரை, 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கியதன் மூலம் அரசியலில் அறிமுகமான அவர், தற்போது மீண்டும் அரசியல் களத்திற்குத் திரும்பியுள்ளார். கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் முத்துலட்சுமி, தனது தேர்தல் பிரசாரங்களில் விவசாயிகளின் துயரங்கள் மற்றும் நெருக்கடிகள் குறித்தே முக்கியமாகப் பேசி வருகிறார்.

Source link