”கின்னஸ் சாதனையில் ஹாட்ரிக்”; உலக அளவில் கவனம் பெற்ற இந்திய இளைஞர்

இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனையில் ஹாட்ரிக் அடித்திருப்பது உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

கர்நாடகா மாநிலம், தார்வாட் பகுதியைச் சேர்ந்தவர் ஓவியர் அமர் காலே (29). இவர், ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், சமீபத்தில் இவர் வரைந்த ஓவியம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. 

அதாவது, சமையலறை பொருட்களைக் கொண்டே அவர் அந்த ஓவியத்தை வரைந்துள்ளார். சமையலில் பயன்படுத்தப்படும் மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூளைக் கொண்டு 175.82 சதுர மீட்டர் (சுமார் 1,892.5 சதுர அடி) பரப்பளவில் மிகப்பெரிய ஓவியத்தை வரைந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.  

சுமார் 10 மணிநேரத்தில் வரையப்பட்ட இந்த ஓவியத்தில், கர்நாடக மாநில வரைபடம் மற்றும்  அதனுள்ளே வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஹம்பி கல் தேர்’ ஆகியவை அச்சு அசலாக வரையப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. 6 கிலோ மஞ்சள் மற்றும் 5 கிலோ மிளகாய்த் தூளில் வரையப்பட்ட இந்த ஓவியம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.  

இவர் ஏற்கனவே, கடந்த 2021 ஆம் ஆண்டு, ஒரு நிமிடத்தில் அதிக கைரேகை பதிவு செய்தலில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் தனி நபர் ஒருவரால் வாயால் வரையப்பட்ட மிகப்பெரிய ஓவியத்திற்கான கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.  இந்நிலையில், இது இவரது மூன்றாவது கின்னஸ் சாதனையாகும்.