ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 10)16-வது லீக் போட்டியில், பெங்களூரு அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக், அணியின் முன்னேற்றம் மற்றும் இளம் வீரர்களின் பங்களிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.
“நிச்சயமாக, கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த மைதானத்தில், இன்று நாங்கள் மிகவும் நேர்த்தியாக விளையாடினோம்.
பந்துவீச்சை நாங்கள் தொடங்கிய விதம் எனக்கு மகிழ்ச்சி அளித்தது, ஆனால் நடுப்பகுதி ஓவர்களில் நாங்கள் ஆட்டத்திற்குள் மீண்டும் வந்த விதம் சிறப்பாக இருந்தாலும், இன்னும் 20 ரன்கள் குறைவாகவே விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.
ஒரு கேப்டனாக நான் எடுத்த சில தவறான முடிவுகளால் அவர்களை 170 ரன்களுக்குள் சுருக்க முடியாமல் போய்விட்டது. இந்த ஆடுகளத்தில் நேராக சிக்ஸர்களை அடிப்பது கடினம், ஆனால் எங்களது சுழற்பந்துவீச்சாளர்கள் எதிரணிக்கு சாதகமாக இடம் கொடுத்துவிட்டனர்.
ஜெய்ப்பூர் மற்றும் குவஹாத்தியில் மேற்கொண்ட பயிற்சிகள் எங்களுக்குப் பெரும் உதவியாக இருந்தன. இங்குள்ள கறுப்பு மண் பந்தைத் தாழ்வாகவும் மெதுவாகவும் வரச்செய்யும் என்பதை நாங்கள் அறிவோம்.
ஆடுகளத்தின் தன்மையைக் கணிப்பதில் நாங்கள் சிறந்த அணியாக இருக்க விரும்புகிறோம். மேலும், வைபவ் சூர்யவன்ஷி ஒரு குழந்தை போன்றவர்.

அவருக்குப் பிடித்த உணவுகளை வழங்கி, அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே எங்கள் வேலை” என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
“இந்த மைதானத்தின் மெதுவான ஆடுகளத்திலேயே சிறப்பாக ஆடிய நாங்கள், இனி வரும் அதிரடி ஆடுகளங்களில் இன்னும் சிறப்பாகச் செயல்படுவோம்,” என்று பேசினார்.
