‘வனக்கிளியே…’ – ‘டோரதி’ பட ஓடிடி அப்டேட் வெளியீடு!

மூன்றாம் பாலினத்தவரை மையமாக கொண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘டோரதி’ படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியது மட்டுமல்லாமல் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்திருந்தார். இவரோடு ஆஸ்கர் வென்ற குனீத் மோங்கா மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 

படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒரு தரப்பால் விமர்சனத்தையும் எதிர்கொண்டது. குறிப்பாக நண்பர்களாக இருந்து பின்பு காதலாரக மாறி கிளைமாக்ஸில் இருவரும் முத்தம் கொடுக்கும் காட்சி கடும் விவாதத்தை உருவாக்கியது. இது ஒரு புறம் இருக்க முன்னணி திரை பிரலங்களும் ரசிகர்களும் படத்தை வரவேற்று படத்தில் பேசப்பட்ட விஷயத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதில் தமிழைத் தாண்டி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. திரையரங்கில் இப்படம் வரவேற்பை பெற்றதால் ஓடிடி-யிலும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.