தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்: திருவெறும்பூரில் விவசாயிகள் சாலை மறியல்

தேர்தல் வாக்குறுதி அளித்தபடி அனைத்து விவசாயக் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கங்கள் மற்றும் வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட முக்கிய கோரிக்கைகள் விவரம்:

*தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து விவசாயக் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

*தமிழகத்தை வறட்சி மாநிலமாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000-மும், விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ. 10,000-மும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

*வேளாண்மை செய்த மற்றும் செய்யாத அனைத்து நிலங்களுக்கும் பயிர்க்காப்பீடு செய்வதற்குரிய முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்கல் முறையில் பதிவு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.

*கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காக அந்தப் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் தண்ணீர் நிரப்பித் தர வேண்டும்.

*இலவச மின்சாரத்தை ஒழித்துக்கட்டும் வகையில் விவசாயப் பம்ப்செட்டுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

சாலை மறியலும், கைது நடவடிக்கையும்

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநகர மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்டக் குழு உறுப்பினர் செல்வராஜ், திருவெறும்பூர் வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வட்டார விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளை, திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் யோகரத்தினம் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கைதுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் நடராஜன் கூறியதாவது:

“தமிழகம் முழுவதும் தற்போது சுமார் 200 இடங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்கு முன்பு ‘விவசாயிகளைப் பாதுகாப்போம்’ என்றும், 5 ஏக்கர் வரை உள்ள சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பியே நாங்கள் வாக்களித்து அவர்களை ஆட்சிக்குக் கொண்டுவந்தோம்.

ஆனால், ஆரம்பத்தில் ரூ. 50,000 வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றனர்; இது விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு ரூ. 75,000 வரையிலும், பின்னர் ரூ. 1 லட்சம் வரையிலும் கடன் பெற்றவர்களுக்குப் பகுதிவாரியாகத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இதனால் தான் விவசாயிகள் தொடர் போராட்டங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர்களின் சான்றிதழ்கைகளைக் கொண்டு பயிர் காப்பீடு செய்யும்போது ஏக்கருக்கு ரூ. 9,000 மட்டுமே கிடைக்கிறது; இது போதாது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் மாநில அரசின் கணக்கெடுப்பு என்பது இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்வதற்கான முயற்சியாகும். தமிழக அரசு எங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தி: க. சண்முகவடிவேல்

Source link