மாஸ்கோ: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழுத்தம் தந்ததை அடுத்து, அமெரிக்க சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை இன்று சந்தித்து பேசினார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், நான்கு ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபரின் சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப், ஐரோப்பிய நாடான நார்வேவின் தலைநகர் ஓஸ்லோவில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சமீபத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக அமெரிக்க தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் பின், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அதிபர் விளாடிமிர் புடினை இன்று சந்தித்துப் பேசினார் விட்காப். இந்த சந்திப்பின் போது, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகள் அடங்கிய ஆவணங்களை விட்காப் சமர்ப்பித்தார்.
மேலும், உக்ரைன், – அமெரிக்கா. ரஷ்யா இடையேயான முத்தரப்பு பேச்சை மீண்டும் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மறுபுறம், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் இனியும் தாமதிக்காமல் போரை முடிவுக்குக் கொண்டு வரும் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், என வலியுறுத்தினார்.
ரஷ்யா ஒரு பெரிய இயந்திரம் போல முன்னோக்கி செல்கிறது, அவர்கள் கணிசமான நிலப்பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்; எனவே உக்ரைன் சமாதானத்திற்கு முன்வர வேண்டும், என, அவர் கூறினார்.
சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க ஒப்பந்தம் செய்தது மற்றும் ரஷ்யா மீதான புதிய தடைகளுக்கு விலக்கு அளித்தது போன்ற டிரம்பின் நடவடிக்கைகள், அமெரிக்கா மற்றும் உக்ரைன் உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில் விட்காப்பின் இந்த சந்திப்பு ஒரு புதிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
