சென்னை நந்தனத்தில் 80 ஏக்கரில் தலைமை செயலகம்: நகரமைப்பு வல்லுநர்கள் அரசுக்கு பரிந்துரை

சென்னை: புதிய தலைமை செயலகம் கட்டும் திட்டத்துக்கு நந்தனத்தில் கோல்ப் மைதானம் பயன்பாட்டுக்காக குத்தகை விடப்பட்ட அரசு நிலத்தை பயன்படுத்தலாம் என தமிழக அரசுக்கு தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

தமிழக அரசின் சட்டசபை, தலைமை செயலகம் தற்போது, செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டையில், நெரிசல் அதிகரித்து வருகிறது. மாற்று இடத்தில் புதிய சட்டசபை, தலைமை செயலகம் கட்ட வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக பட்டினப்பாக்கம் வீட்டுவசதி வாரிய நிலம், பல்லவன் இல்லம், தீவுத்திடல் போன்ற இடங்கள் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சதானந்த், தமிழக முதல்வர் விஜய் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு விரிவான அறிக்கையுடன் கடிதம் அனுப்பி உள்ளார்.

அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

புதிய தலைமை செயலக வளாகம் கட்டப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். நீண்ட கால திட்டமிடல் அடிப்படையில், இதற்கான இடத்தை தேர்வு செய்வது அவசியம்.

திட்டத்துக்காக அதிகாரிகள் பல்வேறு இடங்களை பரிந்துரைத்து வருகின்றனர். நகரமைப்பு வல்லுனர்கள் பார்வையில் தெரிய வந்த தகவல்கள் அடிப்படையில், அண்ணா சாலை, நந்தனத்தில் உள்ள, 80 ஏக்கர் அரசு நிலம் இதற்கு ஏற்றதாக இருக்கிறது என்பதை தெரிவிக்கிறோம்.

நந்தனத்தில் அரசினர் பண்ணைக்கு அருகில் உள்ள, 80.40 ஏக்கர் அரசு நிலம், காஸ்மோபாலிட்டன் கிளப் மற்றும் கோல்ப் விளையாட்டு மைதான பயன்பாட்டில் உள்ளது. கோல்ப் மைதானத்துக்காக குத்தகைக்கு வழங்கப்பட்ட இது அரசு நிலமாக உள்ளது.

கடந்த, 1936ல் குத்தகைக்கு வழங்கப்பட்ட இந்த நிலம் தற்போதும் கோல்ப் மைதான பயன்பாட்டில் உள்ளது. குத்தகை காலம் முடிந்துவிட்டது. வழக்குகளில் உத்தரவுகள் வந்தும், இதில் குத்தகை புதுப்பிப்பதில், இன்னும் இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது.

இத்தகைய சூழலில், அந்த குறிப்பிட்ட நிலத்தை தமிழக அரசின் தலைமை செயலக திட்டத்துக்கு பயன்படுத்துவது ஏதுவாக இருக்கும். அண்ணா சாலையில், இரண்டு அல்லது மூன்று நுழைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

பின்புறம், அடையாற்றின் மேல் ஒரு பாலம் அமைத்தால், கோட்டூர்புரத்துக்கும் இணைப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. குத்தகை முடிந்த நிலையில், கிண்டி ரேஸ்கோர்ஸ் நிலம் கையகப்படுத்தப்பட்டது போன்று, இந்த நிலத்தை திரும்ப பெற்று பயன்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link