மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், பாகிஸ்தான் உடனான உறவை வலுப்படுத்தி வருகிறது.குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீருடன் அதிபர் டிரம்ப் அதீத நெருக்கம் காட்டுவது கவனம் பெற்றுள்ளது. அதே நேரத்தில், இந்தியா உடனான உறவை பேணுவதில் அமெரிக்கா அலட்சிய போக்கை காட்டி வருகிறது.
இந்திய ஏற்றுமதிகளுக்கு வரி விதித்தது, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு நெருக்கடி தந்தது, அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐ.டி., நிறுவன ஊழியர்கள் மற்றும் உயர் கல்வி பெற முயற்சிக்கும் மாணவர்களை பல்வேறு வகைகளில் குறிவைப்பது போன்ற செயல்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.
மூன்று நாள் பயணமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, மஹாராஷ்டிராவின் மும்பைக்கு நேற்று வந்தார். அங்கு நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். தொடர்ந்து, இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.அப்போது ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியா – அமெரிக்க உறவு, பாகிஸ்தான் உடனான அமெரிக்காவின் தொடர்பு, வர்த்தக ஒப்பந்த முயற்சிகள் மற்றும் உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில் மார்கோ ரூபியோ கூறியதாவது:பாகிஸ்தானுடன் அமெரிக்கா உறவு வைத்திருப்பது, இந்தியா உடனான உறவை எந்த வகையிலும் பாதிக்காது.இரு நாடுகள் உடனான உறவையும் அமெரிக்கா தனித்தனியாகவே பார்க்கிறது. பாகிஸ்தானுடன் உறவு வைத்திருக்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு உள்ளது. அந்த உறவை பயன்படுத்தி, இந்தியாவுக்கு கவலை அளிக்கும் நடவடிக்கைகளை தடுக்கவும், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தவிர்க்கவும் உதவ முடியும். இது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்தியாவுக்கு நான் மேற்கொண்டுள்ள பயணம், சந்திப்புகள், இணைந்து மேற்கொள்ளும் பணிகள் ஆகியவை இந்தியா உடனான உறவுக்கு அமெரிக்கா அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
கடந்த 1970களில் இருந்த உலக சூழல் இப்போது இல்லை. அப்போது பனிப்போர் நிலவியது. எனவே, அன்றைய காலகட்டத்துடன் தற்போதைய சர்வதேச சூழலை ஒப்பிடுவது சரியாக இருக்காது.ரஷ்யா நடத்தி வரும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது சிக்கலானது. அதை எளிதில் தீர்க்க முடிந்திருந்தால், இந்தப் போர் நீண்ட காலத்துக்கு முன்பே முடிவுக்கு வந்திருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
@block_B
subboxhd@ரூபியோவை வரவேற்ற அம்பானி!
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள, ‘ரிலையன்ஸ்’ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு சென்றார். அங்கு அவரை, ‘ரிலையன்ஸ்’ குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, ‘ரிலையன்ஸ்’ நிறுவனத்தின் வனவிலங்கு மீட்பு மையமான, ‘வன்தாரா’, புதிய பசுமை எரிசக்தி உற்பத்தி வளாகம் ஆகியவற்றையும் ரூபியோ பார்வையிட்டார். இந்த பயணம் தனிப்பட்ட நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
