‘பாரா’ ஆசியா… இந்தியா அசத்தல்: ஒரே நாளில் 29 பதக்கம்

நகோயா: ‘பாரா’ ஆசிய விளையாட்டு மூன்றாவது நாளான நேற்று, இந்தியா 5 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கம் கைப்பற்றியது.

ஜப்பானின் அய்ச்சி–நகோயாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாரா’ ஆசிய விளையாட்டு 5வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 168 பேர் பங்கேற்றுள்ளனர். முதல் இரண்டு நாளில் 35 பதக்கம் கைப்பற்றிய இந்திய நட்சத்திரங்கள் நேற்றும் தனது பதக்க வேட்டையை தொடர்ந்தனர்.

பார்வை குறைபாடு உள்ள பெண்களுக்கான 100 மீ., ‘டி 12’ பைனல் நடந்தது. இந்தியா சார்பில் சிம்ரன் சர்மா, 26, பங்கேற்றார். போட்டி துவக்கத்தில் இருந்து முந்திய சிம்ரன், முடிவில் 12.02 வினாடி நேரத்தில் வந்தார். புதிய பாரா ஆசிய சாதனை படைத்து, தங்கப்பதக்கம் வென்றார். நடப்பு தொடரில் இவர் வென்ற இரண்டாவது தங்கம் ஆனது.

முன்னதாக, 200 மீ., ஓட்டத்திலும் சிம்ரன் தங்கம் வென்றிருந்தார். தவிர, அன்குர், ஷீத்தல் தேவி, நிஷாத்திற்குப் பின், ஒரே பாரா ஆசிய விளையாட்டில் 2 தங்கம் வென்ற நான்காவது இந்தியர் ஆனார் சிம்ரன்.

பெண்களுக்கான 100 மீ., ஓட்டம் ‘டி 35’ பிரிவில் இந்தியாவின் பிரீத்தி பால், 13.98 வினாடி நேரத்தில் வந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். சீனாவின் ஜியா (13.57), ஈராக்கின் பாத்திமா (14.68) தங்கம், வெண்கலம் வசப்படுத்தினர்.

ஆண்களுக்கான 100 மீ., ஓட்டம், ‘டி 64’ பிரிவு பைனலில் இந்தியாவின் பிரனவ் தேசாய், 11.96 வினாடியில் வர, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஜப்பானின் கெங்கோ (11.39), தாய்லாந்தின் தென்பூம் (11.78) முதல் இரு இடம் பிடித்தனர்.

திலிப் கலக்கல்

ஆண்களுக்கான 100 மீ., ஓட்டம் ‘டி 47’ பிரிவில் பைனல் நடந்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய திலிப் மகது காவிட், 10.69 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இந்தியாவின் மற்றொரு வீரர் முகமது மோர்சிங்கனாகத், 10.72 வினாடியில் வர, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

ஆண்களுக்கான 1500 மீ., ‘டி 12/13’ பிரிவில் இந்தியாவின் ஷரத் மகனஹள்ளி பங்கேற்றார். இவர், 4 நிமிடம், 11.01 மீ., நேரத்தில் வந்து இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். ஜோர்டானின் நபீல் (4:07.97), பிலிப்பைன்சில் சைரில் (4:23.19) தங்கம், வெண்கலம் வென்றனர்.

400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அகிரா பனோது (‘டி 35/38’), 100 மீ., ஓட்டம் ‘டி 47’ பிரிவில் முகமது பாசில் (), ஆண்கள் நீச்சலில் ரவி புதிகினா () வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினர்.

இரண்டு பதக்கம்

ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் (‘டி 64’) இந்தியா சார்பில் பிரவீன் குமார், பான்டி பங்கேற்றனர். இதில் 2.05 மீ., உயரம் தாண்டிய பிரவீன் குமார், ஆசிய பாரா சாதனையுடன் தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். 1.92 மீ., தாண்டிய பான்டிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. உஸ்பெகிஸ்தானின் ஜியாஜோவ் (1.86) வெண்கலம் வென்றார்.

இந்தியாவுக்கு ‘மூன்று’

ஆண்களுக்கான குண்டு எறிதலில் ‘எப் 46’ பிரிவில் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய மூன்று வீரர்களும் பதக்கம் கைப்பற்றினர்.
இதில், 6வது வாய்ப்பில் அதிகபட்சம் 15.87 மீ., துாரம் எறிந்த சச்சின் கிலாரி, பாரா ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். முகமது யாசெர், 15.06 மீ., துாரம் எறிந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். மற்றொரு வீரர் பர்வீன் (14.94) வெண்கலம் வசப்படுத்தினார்.

குண்டு எறிதலில் அபாரம்

ஆண்களுக்கான குண்டு எறிதல் எப் 53 பிரிவு பைனல் நடந்தது. இந்தியா சார்பில் ஆயுஷ் வர்மா, 35, களமிறங்கினார். ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 8.16 மீ., துாரம் எறிந்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஈரானின் அலிரேசா (8.09), கஜகஸ்தானின் மஹம்பெட் (6.81) அடுத்த இரு இடம் பெற்றனர்.
* பெண்களுக்கான குண்டு எறிதல் ‘எப் 34’ பிரிவில் இந்தியாவின் பாக்யஸ்ரீ, வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
* ஆண்களுக்கான குண்டு எறிதலில் (‘எப் 40’) இந்தியாவின் ரவி ரங்காலி (10.02 மீ), வெண்கலம் வென்றார்.
* ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (‘எப் 12/13’) இந்தியாவின் மஞ்ஜீத் வியாஸ் () வெள்ளி வென்றார்.
* ஆண்களுக்கான ஈட்டி எறிதல் ‘எப் 55’ பிரிவில் இந்தியாவின் சுஹ்செய்ன் (29.94 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார்.
* பெண்களுக்கான வட்டு எறிதல் ‘எப் 55’ பிரிவில் இந்தியாவின் கரம்ஜோதி (21.60 மீ.,) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
* ஆண்கள் வட்டு எறிதல் ‘எப் 37’ பிரிவில் இந்தியாவின் ஹனே (57.04 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார்.

ஷீத்தல், பயல் ஜோடி ‘வெள்ளி’

வில்வித்தையில், காம்பவுண்டு பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, பயல் நாக் ஜோடி, சீனாவின் ஜுகிங், ஜிங் ஜாவோ ஜோடியை சந்தித்தது. முதல் செட் 36–36 என சமன் ஆனது. இதன் பின் அடுத்தடுத்த செட்டில் 35–38, 34–38, 36–38 என இந்திய ஜோடி பின்தங்கியது. முடிவில் இந்திய ஜோடி 141–150 என தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
ஆண்கள் இரட்டையர், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் ஷ்யாம் சுந்தர், தோமன் ஜோடி, 1 புள்ளி வித்தியாசத்தில் (153–154), சீன ஜோடியிடம் தோல்வியடைய, பதக்கம் நழுவியது.
கலப்பு அணிகளுக்கான அரையிறுதியில் இந்திய அணி, 2–6 என தென் கொரியாவிடம் தோல்வியடைந்தது.

சபாஷ் கஸ்துாரி, சோலைமலை

பெண்களுக்கான ‘பவர் லிப்டிங்’ போட்டியில் இந்தியா சார்பில் கஸ்துாரி ராஜாமணி, 42, (தமிழகம்) பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 103 கிலோ துாக்கினார் கஸ்துாரி. அடுத்து கடைசி, 3வது வாய்ப்பில் 108 கிலோ துாக்க, கஸ்துாரி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
* பாட்மின்டன் ஆண்கள் இரட்டையரில் எஸ்.எச் 6 பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் சிவராஜன் சோலைமலை, கிருஷ்ணா ஜோடி, 6–21, 8–21 என சீன ஜோடியிடம் தோற்றது. முடிவில் 3 போட்டியில் ஒன்றில் மட்டும் வென்று, இரண்டாவது இடம் பெற, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இருவருக்கு தலா ரூ.50 லட்சம்

சென்னை: முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜப்பானில் நடக்கும் 5வது பாரா ஆசிய விளையாட்டு, பெண்களுக்கான பளுதுாக்குதல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று, இந்தியா, தமிழகத்துக்கு பெருமை சேர்த்த கஸ்துாரி ராஜாமணிக்கு பாராட்டுக்கள். ஆண்கள் இரட்டையர் பாட்மின்டனில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், இதில் இடம்பெற்ற தமிழக வீரர் சிவராஜன் சோலைமலைக்கும் வாழ்த்துகள். இருவருக்கும் தமிழக அரசு வாயிலாக, தலா 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்,’ என கூறியுள்ளார்.

பதக்கப்பட்டியல்

பாரா ஆசிய விளையாட்டில் 14 தங்கம் உட்பட 64 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
‘டாப்–5’ நாடுகள்
‘ரேங்க்’ நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 102 62 57 226
2 ஜப்பான் 29 36 35 100
3 உஸ்பெகிஸ்தான் 29 30 30 89
4 தென் கொரியா 15 14 17 46
5 இந்தியா 14 23 27 64

Source link