தாறுமாறாக ஓடிய பஸ் மோதி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு: மாரடைப்பால் டிரைவரும் பலியான சோகம்

போத்தனுார்: டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், தாறுமாறாக ஓடிய அரசு பஸ், ஆட்டோ ஓட்டுநர் நுார்முகமது, 51, மீது மோதியதில், அவர் உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக, 86 பயணியர் உயிர் தப்பினர்.

கோவை, மதுக்கரை பாலத்துறையில் இருந்து, நேற்று காலை, 10:00 மணிக்கு அரசு டவுன் பஸ், காந்திபுரம் நோக்கி சென்றது. சிங்காநல்லுார் ராமானுஜம்நகரை சேர்ந்த மார்ட்டின், 45, பஸ்சை ஓட்டினார். குறிச்சி, முருகா நகரை சேர்ந்த பரமேஸ்வரன், 55, நடத்துனராக இருந்தார்.

பஸ் குனியமுத்துார் சுண்ணாம்பு காளவாய் அருகே வந்தபோது, மார்ட்டினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சுவலியால் துடித்த அவர், பிரேக்கை அழுத்திய நிலையில் மயங்கி, ஸ்டியரிங் மீது சாய்ந்தார்.

கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதியது. ஆட்டோ டிரைவர் நுார்முகமது, வெளியே குதித்ததில், பஸ்சில் அடிபட்டு, உயிரிழந்தார். மேலும், நிற்காமல் சென்ற பஸ், சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு கார், மூன்று பைக்குகள், நடந்து சென்ற ஒருவர் மீது மோதி, சிறிது துாரம் ஓடி நின்றது.

அருகிலிருந்தோர் காயமடைந்தவர்கள் மற்றும் மார்ட்டினை மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில், மார்ட்டின், வழியிலேயே இறந்தார். இதில், பஸ்சில் பயணித்த, 86 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Source link