நேற்று ஜாமீன்.. இன்று சம்மன்.. சவ்ரவ் தாஸ் – அசுதோஷ் ரங்காவை விடாத டெல்லி போலீஸ்.. அதிரடி

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டம் நடத்தி கைதான வழக்கில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கு நேற்று இரவு தான் ஜாமீன் கிடைத்தது. இதனால் அவர்கள் நிம்மதியடைந்த நிலையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இருவருக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி இன்று சம்மன் வழங்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அடுத்தடுத்து பிரச்சனைகளில் சிக்கி வருகின்றனர். கடந்த 10ம் தேதி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

அதன்பிறகு அவர்கள் 12ம் தேதி விடுவிக்கப்பட்டனர். பிறகு மீண்டும் 13ம் தேதி சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் தடையை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 14ம் தேதி முதல் நேற்று வரை இருவரும் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்று இரவில் இருவருக்கும் டெல்லி சிறப்பு எக்ஸிக்கியூட்டிவ் மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கினார். டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கான இடமாக இல்லை. இதனால் அங்கு போராட்டம் நடத்தக்கூடாது என்பது உள்பட சில நிபந்தனைகளும் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஹேப்பியாகினர்.

ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்டநேரம் நீடிக்கவில்லை. ஏனென்றால் இன்று காலையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இருவருக்கும் சம்மன் வழங்கி உள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டம் நடத்தியது தொடர்பான 2 வழக்குகள் டெல்லி போலீசாரிடம் இருந்து டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முடிவெடுத்துள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர்.