பிகானேர் இல்லத்தில் போராட்ட போட்டோக்களுக்கு அனுமதி மறுப்பு; பிரியங்கா காந்தி மகன் கண்காட்சியில் 74 புகைப்படங்கள் அகற்றம்

எழுதியவர்:அனுஸ்ரீ கே.சி.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் ரைஹான் ராஜீவ் வத்ரா நடத்திய புகைப்பட கண்காட்சியில் 105 புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், இதில் 74 புகைப்படங்களை அகற்றுமாறு அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருப்பவர் பிரியங்கா காந்தி வத்ரா. இவரது கணவர் தொழிலதிபர் ராபர்ட் வத்ரா. இவர்களின் மகன் தான் ரைஹான் ராஜீவ் வத்ரா. விஷூவல் ஆர்ட்டிஸ்டாக இருக்கும் இவர், டெல்லியில் உள்ள பிகானேர் ஹவுஸில் ‘நோ ஐடியா இஸ் ஃபைனல்’ (No Idea Is Final) என்ற புகைப்படக் கண்காட்சியை நடத்தியுள்ளார்.  

இந்த கண்காட்சி தொடங்க சில மணி நேரங்கள் இருக்கும்போது ரைஹான் ராஜீவ் வத்ராவை சந்தித்த அதிகாரிகள், கண்காட்சிக்காக வைக்கப்பட்ட 105 புகைப்படங்களில் 74 புகைப்படங்களை அகற்றுமாறு அல்லது மாற்றுமாறு” தன்னிடம் கூறப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் மாற்றுமாறு சொன்ன பெரும்பாலான படங்கள் டெல்லியில் சமீபத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டங்கள் தொடர்பானவை என்றும் கூறியுள்ளார். 

அதிகாரிகள் கூறியதன் காரணமாக மாலை வேளைக்குள், வெறும் 35 புகைப்படங்கள் மட்டுமே கண்காட்சியில் எஞ்சியிருந்தன. மேலும், அகற்றப்பட்ட புகைப்படங்களுக்குப் பதிலாக வைக்கப்பட்டிருந்த காலியான சட்டங்களுக்கும் (blank frames) அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு குடிமகனாகவும் கலைஞராகவும், இந்தப் படங்களை எடுத்து வெளியிடுவது எனது கடமை. கலை மீதான எந்தவொரு கட்டுப்பாடும் தவறானது மற்றும் வீணானது என்பது என் கருத்து. இதுபோன்ற எத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், கலைதானாகவே மக்களைச் சென்றடைவதற்கான வழியைக் கண்டறியும் என்று ரைஹான் கூறினார்.

இது குறித்து கருத்து கேட்க தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (The Indian Express) பிகானேர் ஹவுஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்டது, ஆனால் உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

இது குறித்து செய்தி நிறுவனமான பி.டி.ஐ (PTI) ரைஹானின் தாய் பிரியங்கா காந்தி வத்ராவின் கருத்தை வெளியிட்டுள்ளது. இதில் இந்த நடவடிக்கையை ‘கேலிக்கூத்தானது’ என்றும், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் குரலை “நசுக்கும் முயற்சி. இன்று இவருக்கு இந்த நிலை, நாளை இது மற்றொரு கலைஞருக்கு நடக்கும் என்று அவர் விமர்சித்துள்ளார்.

சர்ச்சையின் மையத்தில் உள்ள புகைப்படங்கள், டெல்லியில் கடந்த ஆறு மாதங்களாக நடந்த மக்கள் இயக்கங்களைப் பதிவுசெய்துள்ளன, “ஆனால் இயக்கங்கள் மற்றும் அவற்றின் லயத்தின் (rhythm) கோணத்தில் இ புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன” என்று ரைஹான் கூறினார். 26 வயதான ரைஹான், ஒரு பார்வையாளராக மட்டுமல்லாமல், போராட்டத்தில் பங்கேற்ற ஒரு நபராகவும் இருந்து இவற்றை படமாக்கியதாக கூறியுள்ளார். “ஒரு கூட்டத்திற்குள் இருந்து படம்பிடிப்பதும், பெரிய இயக்கங்கள் வெளிப்படுத்தும் கவித்துவத்தைக் காண்பதும் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது” என்று அவர் கூறினார்.

இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய ரைஹான், “கண்காட்சிக்கு முந்தைய நாள் மாலை 6 மணிக்கு முதல் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, மேலும் இது குறித்து பின்னர் தெரிவிப்பதாக அவர்களிடம் கூறப்பட்டது. ஆனால், கண்காட்சி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு, அதாவது புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்குதான் எனக்கு முதல் எழுத்துப்பூர்வ எதிர்ப்பு அனுப்பப்பட்டது. 105 படங்களில் 74 படங்களை அகற்ற அல்லது மாற்ற எனக்கு 30 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டன. 

அந்தப் படைப்புகளின் “நேரமும் சூழலும்” பொருத்தமற்றவை என்றும், வெளிப்படையாக அரசியல் சார்ந்தவை என்றும், நகரம் முழுதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் இந்த நேரத்தில் இத்தகைய படங்களைக் காட்டுவது சரியான நேரமல்ல என்றும் மட்டுமே விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார். 

நிகழ்ச்சி இடத்தில் விநியோகிக்கப்பட்ட அறிக்கையில், தனது குழுவினர் புகைப்படங்களுக்குப் பதிலாக காலியான சட்டங்களை வைத்ததாக ரைஹான் கூறினார். “அவையும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், அவற்றையும் அகற்ற வேண்டும் என்றும் எங்களிடம் கூறப்பட்டது,” என்று அவர் பதிவிட்டுள்ளார். 

கண்காட்சி நடைபெறும் இடம் குறித்து அவர் கூறுகையில், “அக்டோபர் 15 அன்று நான் அவர்களுடன் புகைப்படங்களின் வரிசை அமைப்பைப் (layout) பகிர்ந்துகொண்டேன், ஆனால் அது தெளிவாகப் படிக்கக்கூடியதாக இல்லை என்று இன்று என்னிடம் கூறினர்.” அந்த இடத்தில் “அரசியல் பதிவுகளுக்கு” எதிரான கொள்கை இருப்பதால், அரசியல் முழக்கங்கள் அடங்கிய புகைப்படங்களை அவர் ஏற்கனவே அகற்றியிருந்தார்.

“எந்தவொரு கட்டத்திலும் ஒவ்வொரு கலைப்படைப்பும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று அவர்கள் கூறவில்லை. அதேபோல் அனைத்துப் படங்களையும் முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறு அவர்கள் என்னிடம் கேட்கவும் இல்லை. கண்காட்சியின் முன்னோட்டத்தின் போது அவர் அளித்த அறிக்கையில், இந்த திட்டத்திற்கு ஜூன் 30, 2025 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், “சுதந்திரம், கட்டுப்பாடு மற்றும் ஒற்றுமை ஆகிய கருப்பொருள்களைச் சித்தரிக்கும் படங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்ட புகைப்படங்களில் தேசியக் கொடி அடங்கிய படங்களும் இருந்தது. “இந்திய தேசியக் கொடியின் படங்களையும் அகற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்பியதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்,. “நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  எதையும் நானாக அகற்ற மாட்டேன் என்று அவர்களிடம் கூறினேன். நான் வளாகத்தை விட்டு வெளியேறிய உடனேயே, அவர்களே அந்தப் படத்தை அகற்றிவிட்டனர் என்று கூறியுள்ளார்.

‘தி யூஷுவல் சஸ்பெக்ட்ஸ்’ (The Usual Suspects) கலைக்கூடத்தையும், ‘யூ கான்னாட் மிஸ் திஸ்’ (You Cannot Miss This) கலை அமைப்பையும் நிறுவிய ரைஹான், “அவர்களின் முடிவும், வெளிப்படையாகச் சொன்னால் அவர்களின் கொள்கையுமே விசித்திரமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். என் பார்வையில் அனைத்துக் கலைகளும் அரசியல் சார்ந்தவைதான்,” என்றார்.

இந்தச் சம்பவம் பொது பண்பாட்டு மையங்கள் செய்ய வேண்டிய கடமைகள் குறித்த தனது பார்வையை கூர்மைப்படுத்தியுள்ளதாக கூறியுள்ள அவர், “என்னைப் பொறுத்தவரை, இப்படி நடந்தது ஆச்சரியமளிக்கிறது. பொது பண்பாட்டு மையங்களுக்கு, அவற்றைச் சொந்தமாக வைத்துள்ளவர்கள் அல்லது நடத்துபவர்கள் மீது மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பது எனது கருத்து. கலைப்படைப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் யாரைப் புண்படுத்தினாலும் அல்லது இடையூறு செய்தாலும், அவற்றை தணிக்கை செய்யும் எந்தவொரு இடமும் தவறானது என்று கூறியுள்ளார்.

தனது முந்தைய பாணியில் இருந்து விலகி ‘நோ ஐடியா இஸ் ஃபைனல்’ படைப்பை உருவாக்கியதாக கூறியுள்ள அவர், “முதலில் என்னைக் கவரும் கலைப்படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, இரண்டாவதாக அவற்றை ஒரு கருப்பொருளுக்குள் கொண்டு வருவதே இதன் முதன்மை நோக்கம். இது நான் முன்பு செய்த முறையிலிருந்து மாறுபட்டது; முன்பு ஒரு கதையை உருவாக்கி, அதற்குள் கலைப்படைப்புகளை அமைப்பேன் என்று கூறியுள்ளார்.

இந்த படைப்புகளில் வனவிலங்குகள், மக்கள் இயக்கங்கள் மற்றும் சுருக்கக் கலைப் படங்கள் (abstract images) இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள படைப்புகள் அக்டோபர் 25 வரை பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். “விரைவில் முழுத் தொகுப்பையும் வேறு ஒரு இடத்தில் காட்சிப்படுத்துவேன்,” என்று அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

Source link