சிறையில் இருந்து தப்பிய கைதி; மீண்டும் சிறையிலடைத்த காவல்துறை

புழல் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய கைதி சுதீப் போகதி (சுஜித்), மீண்டும் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.  

சென்னை, புழல் மத்திய சிறையில் கடந்த அக்டோபர் 20, அன்று மாலையில் வழக்கம்போல் கைதிகள் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டது. அப்போது, கைதிகள் இருவர் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், திருட்டு வழக்கில் கைதாகி சிறையிலிருந்த நேபாள விசாரணை கைதி சுஜித் மற்றும் போக்சோ வழக்கில் கைதாகியிருந்த சுரேஷ் ஆகியோர் சிறையில் இருந்து தப்பியது தெரியவந்தது. 

அவர்கள், சிறை வளாகத்தில் உள்ள 23 அடி உயர சுற்றுச்சுவரை தாண்டி குதித்து தப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து,  சிறைத்துறையினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தப்பி சென்ற கைதிகளை தேடிவருகின்றனர். இந்த புகாரின் அடிப்படையில், 14 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் கைதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையில், புழல் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய நேபாள கைதி சுதீப் போகதி (சுஜித்), சென்னை திருமங்கலம்/அண்ணா நகர் பகுதியில் காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை மீண்டும் காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர். மற்றொரு கைதியான சுரேஷை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.