அனிருத் காவ்யா திருமணம்: அரசியல் களத்தில் நெருங்கும் ரஜினி, ஸ்டாலின்- விஜய்க்கு எதிராக திமுகவின் கணக்கு – how anirudh kavya maran marriage brings rajini dmk mk stalin close in politics against tvk vijay

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும், நடிகர் ரஜினி குடும்பத்தை சேர்ந்த அனிருத்திற்கும் வரும் நவம்பர் 10ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த திருமணம் மூலம் அரசியல் ரீதியாக திமுகவிற்கு பலம் சேர்க்கும் விஷயம் ஒன்று அரங்கேறலாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், சன் குழுமத்தின் காவ்யா மாறன் ஆகிய இருவருக்கும் இடையிலான திருமணம் என்பது தலைப்பு செய்திகளில் ஒன்றாக மாறி தினசரி அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. நவம்பர் 10ஆம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம், நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த திருமணம் இரு குடும்பங்கள் இணையும் நிகழ்வாக மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறவுள்ளது.

நடிகர் ரஜினி, திமுக தலைவர் ஸ்டாலின் நட்பு

நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடையிலான நெருக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே தனிப்பட்ட நட்பு உண்டு. இதைத் தாண்டி திமுகவிற்கு சாதகமாக தேர்தல் களத்தில் ரஜினி வாய்ஸ் கொடுத்த நிகழ்வும் அரங்கேறியிருக்கிறது.

1996 பிளாஷ் பேக் இன்றளவும் ரஜினியின் அரசியலை பற்றி பேசுவதற்கு கையிலெடுக்கப்படுகிறது. அப்போது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யவிருந்தது. அப்போது அரசின் செயல்பாடுகள் பொதுமக்களை தாண்டி, நடிகர் ரஜினியை தனிப்பட்ட முறையில் பாதித்திருந்தது.

ஜெயலலிதாவிற்கு எதிராக ரஜினி வாய்ஸ்

​ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று குரல் கொடுத்தார். இது திமுக – தமாகா கூட்டணிக்கு சாதகமாக மாறி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற காரணமாக அமைந்தது. ஸ்டாலின் உடன் மட்டுமின்றி கலைஞர் கருணாநிதி உடனும் நடிகர் ரஜினிக்கு ஆழமான நட்பு உண்டு.

கலைஞரின் கலை படைப்புகளை கொண்டாடுவதில் தொடங்கி, திமுக அரசின் பொது நிகழ்வுகளிலும் பங்கேற்றிருக்கிறார். இவர் தனிக்கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு 2019, 2020 காலகட்டத்தில் உச்சம் தொட்டது. ஆனால் கொரோனா நெருக்கடி கணிப்புகளை தலைகீழாக புரட்டி போட்டது.

அனிருத் ரவிச்சந்தர் – காவ்யா மாறன் திருமணம்

தனது ரசிகர்கள் நலன் கருதி அரசியல் கட்சி தொடங்கும் முடிவை ரஜினி கைவிட்டார். இருப்பினும் தனது ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியான கருத்துகள் ஆங்காங்கு வெளிப்படும். இதை அப்போதைய ஆளுங்கட்சிகள் உடன் பொருத்தி பார்த்து வரவேற்பும், எதிர்வினைகளும் கிளம்பும். தற்போது அனிருத் ரவிச்சந்தர் – காவ்யா மாறன் திருமண நிகழ்வு ரஜினி – மு.க.ஸ்டாலின் இடையிலான நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால் திமுகவிற்கு கூடுதல் பலம் சேர்க்க வாய்ப்பாக அமையும் என்கின்றனர்.

ஆளுங்கட்சியாக தவெகவின் அரசியல் நகர்வு

ரஜினிக்கு 75 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்கு மேல் இவரது வாய்ஸ் எடுபடாது என்று விமர்சிப்பவர்கள் உண்டு. ஆனால் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இவரது ஒவ்வொரு பேச்சும் இன்றும் பேசுபொருளாக மாறி வருவதை மறுக்க இயலாது. இவரது பேச்சிற்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் அடியெடுத்து வைக்கும் பெருங்கூட்டம் இன்றளவும் இருக்கிறது.

தற்போது ஆளுங்கட்சியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது. எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒருபுறம் அதிமுகவை கபளீகரம் செய்யும் நகர்வு, மறுபுறம் திமுக ஒரு ஆபாச கட்சி என பதிய வைக்கும் முயற்சி என தவெகவின் நகர்வும் சலசலப்பை ஏற்படுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கலாநிதி மாறன், ரஜினி, ஸ்டாலின் இணையும் புள்ளி

இத்தகைய சூழலில் திமுகவின் எதிர்கால அரசியல் நகர்வுகளில் நடிகர் ரஜினியின் வாய்ஸ் முக்கியத்துவம் பெறும். குறிப்பாக சன் நெட்வொர்க், ரஜினியின் பிம்பம், திமுகவின் அரசியல் கட்டமைப்பு என மூன்று விஷயங்கள் இணையும் போது மு.க.ஸ்டாலினின் இமேஜ் உயர்வதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆனால் வெளிப்படையாக ரஜினி அப்படி ஒரு வாய்ஸ் கொடுப்பாரா, தனது செயல்பாடுகள் மூலம் ஆதரவு அலை வீச வைப்பாரா என்பதில் தான் விஷயமே அடங்கியிருக்கிறது.

Source link