”தவெக அரசு அதை செய்யாது என நம்புவோம்”; மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் (பெரிய) கோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் இரண்டாம் நாளான இன்று (22-10-26) காலை, அரசு சார்பில் மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  

இந்நிலையில், இந்த மாபெரும் விழா குறித்து தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவில் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார். அதில், ”நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறன் எனப் பலவற்றிலும் மாபெரும் உயரங்களை எய்தி, தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் இராசராசச் சோழன்! அவரது பிறந்தநாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடிட, 2022-ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசில் வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க, 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.

மேலும், துறைவாரியாகச் சோழர் காலச் சிறப்புகளை இக்காலத் தலைமுறையினரின் கண்முன் கொண்டு வரவேண்டும் என்ற பேரார்வத்துடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 56 கோடி ரூபாய் செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க திராவிட மாடல் ஆட்சியில் விதையை ஊன்றியிருக்கிறோம். அந்த விதை மரமாகிட வேண்டும்!

பழக்க தோஷத்தில் அந்தத் திட்டத்தையும் த.வெ.க. அரசு குறுகிய பார்வையுடன் இரத்து செய்து, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்திட மாட்டார்கள் என நம்புவோம். இராசராச சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேறுக! அரசர்க்கரசரின் புகழ் வாழ்க!” எனக்குறிப்பிட்டுள்ளார்.