‘எங்கிருந்து பிரச்சாரத்தை தொடங்குவது’-சாலையில் மோதிக்கொண்ட தவெகவினர்

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், கடந்த 06.04.2026 அன்று மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தீவிர பரப்புரைகள் நடைபெற்று வரும் நிலையில் ராமநாதபுரத்தில் தவெக நிர்வாகிகள் சாலையில் வேட்பாளர் முன்னிலையில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தவெக ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆறாம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்த மலர்விழி, பிரச்சாரத்தை முதுகுளத்தூரில் இருந்து தொடங்குவதா அல்லது கமுதியில் இருந்து தொடங்குவதா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தார். அப்போது கமுதி கிழக்கு ஒன்றிய செயலாளர் கவாஸ்கருக்கும் முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய ஒன்றியச் செயலாளர் குணசேகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

இருபிரிவினராக மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மலர்விழி பிரச்சாரம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ‘விஜய்க்கு உண்மையாக இருக்க வேண்டும்’ என மோதலில் ஈடுபட்ட இருதரப்பையும் மலர்விழி சமாதானப்படுத்த முயன்றும் அங்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Source link