சாப்ட்வேர் இன்ஜினியர் டூ சினிமா நடிகர்; எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு: ஜெயிலர் 2 மூர்த்தி நடிக்க வந்தது எப்படி?

நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில், அதில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற முதன்மை கேரக்டரில் நடித்த ரஜினியை விடவும், மூர்த்தி என்ற கேரக்டரில் நடித்த நடிகர் நமோ நாராயணனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

‘ஜெயிலர் 2’ படம் ஆரம்பத்தில் ரஜினிகாந்தின் படமாகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், படம் வெளியான பிறகு ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தவர் மூர்த்தி தான். நடிகர் நமோ நாராயணன் நடித்த மூர்த்தி கேரக்டர், தனது அதிரடியான ஸ்டைல், சுவாரஸ்யமான காமெடி டைமிங் மற்றும் பிரம்மாண்ட பாவனைகள் மூலம் படத்தின் முதல் பாதியை சூப்பராக கொண்டு சென்றது. 

சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பு, நமோ நாராயணன் பஹ்ரைன், துபாய், மலேசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பணியாற்றிய அதிக சம்பளம் வாங்கிய ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என்றும், அவர் எதிர்பாராமல் தான் நடிகரானார் என்றும் உங்களுக்குத் தெரியுமா? “நடிகராவது குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை” என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார்.

தனது படிப்பை முடித்த பிறகு, அடுத்து என்ன செய்வது என்று நமோவிற்குத் தெரியவில்லை. திரைப்படத் தயாரிப்பில் ஆர்வம் இருந்ததால், அவர் உதவி இயக்குநராகச் சினிமாவில் தனது அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்த்தார். அவர் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் குழுவில், சாப்ட்வேர் இன்ஜினியரிங் பின்னணி கொண்ட ஒரே நபர் அவர் மட்டும்தான்.

சினிமா துறை எவ்வாறு இயங்குகிறது என்று சரியாகத் தெரியாததால், ஆரம்பத்தில் அவர் வார நாட்களில் சாப்ட்வேர் டெவலப்பராக முழுநேர வேலையையும், வார இறுதிகளில் உதவி இயக்குநர் பணியையும் செய்து வந்தார். காலப்போக்கில் அவர் வெளிநாடுகளில் வேலை செய்யத் தொடங்கினார்; பஹ்ரைனில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு துபாய்க்குச் சென்று, அங்கு பிசினஸ் கன்சல்டண்டாகப் பணியாற்றினார்.

அதிக சம்பளம் தரும் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசரான நமோ நாராயணன்

வாழ்க்கை வசதியாகவும், நல்ல வருமானத்துடனும் இருந்தது, ஆனால் ஏதோ ஒன்று அவரைத் தொடர்ந்து அமைதியை இழக்கச் செய்தது. அமெரிக்காவில் நிரந்தரமாகச் குடியேறலாம் என்று நினைக்கும் வரை, அவர் கார்ப்பரேட் வேலைகளையும் திரைப்படப் பணிகளையும் ஒரே நேரத்தில் செய்து வந்தார்.
இது குறித்து 2020-ல் ‘மனோபாலாவின் வேஸ்ட் பேப்பர்’ நேர்காணலில் பேசிய அவர், “நான் பஹ்ரைன், துபாய் மற்றும் மலேசியாவில் பணியாற்றினேன்.

பின்னர் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். வேலை உறுதிசெய்யப்பட்டு, 10 ஆண்டு விசாவும் கிடைத்தது. இறுதியாக ஒரு கார்ப்பரேட் வேலையில் செட்டிலாகிவிடுவேன் என்று தோன்றிய நேரத்தில், ஒரு சூழல் உருவாகி, சினிமாவில் இருப்பதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்,” என்று கூறியிருந்தார்.

உதவி இயக்குநராக இருந்த காலத்தில், நமோவிற்கு இயக்குநர் சமுத்திரக்கனியுடன் நல்ல நட்பு உருவானது. சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுடன் இணைந்து ‘நாடோடிகள்’ என்ற படத்தை எடுக்க முடிவு செய்தபோது, அவர்களுக்கு ஒரு நிர்வாகச் சிக்கல் ஏற்பட்டது. மைக்கேல் ராயப்பன் மும்பையில் இருந்தும், சமுத்திரக்கனி தமிழ்நாட்டிலிருந்தும் பணியாற்றினர்.

இது குறித்து பேசிய நமோ நாராயணன், “எனக்கு அமெரிக்க விசா கிடைத்த சில நாட்களிலேயே, சமுத்திரக்கனி ‘நாடோடிகள்’ படத்தில் ஒப்பந்தமானார். அவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பாலமாகச் செயல்பட ஒரு நபர் தேவைப்பட்டார். அதுவும் நம்பிக்கையான ஒருவரை எதிர்பார்த்தார்கள். அந்தச் சமயத்தில், அவர்களின் எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசராக இணைவதற்காக நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தேன்,” என்று நமோ கூறியுள்ளார்.

முழுநேர நடிகராக மாற்றிய ஒரு தவறான புரிதல்

இந்த படத்தின் பணிகளில் நமோ இடைவிடாது உழைத்தார்; படப்பிடிப்பு தளத்தில் அனைத்தும் சரியாக இருக்கிறதா, இயக்குனர் எவ்வித தடங்கலும் இன்றிப் படப்பிடிப்பை நடத்த முடிகிறதா என்பதை உறுதிப்படுத்தப் பல நேரங்களில் காலை 7 மணி வரை விழித்திருப்பார். இருப்பினும், ஒரு தவறான புரிதல் விரைவில் அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றியது.

இது குறித்து பேசிய அவர், நான் காலை 7 மணி வரை வேலை செய்துவிட்டுத் தூங்கச் சென்று, பிற்பகலில் தான் திரும்பி வருவேன். ஒருமுறை நான் திரும்பி வந்தபோது, ஒருவர் என் சூட்கேஸைச் சுமந்து வந்தார், மற்றொருவர் எனக்கு வேறு சில உதவிகளைச் செய்து கொண்டிருந்தார். இயக்குநரின் பார்வையில், நான் தாமதமாக வந்துகொண்டிருந்தேன். அவர்கள் படப்பிடிப்பு நடத்தப் கஷ்டப்படும்போது, நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக இருப்பதாகச் சசிகுமாரும் சமுத்திரக்கனியும் நினைத்துக் கொண்டனர்.

மற்றவர்களைப் போலவே கடினமாக உழைக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர்கள், எனக்காக ஒரு கேரக்டரை உருவாக்க முடிவு செய்தனர். வேட்டி கட்டி, ஒரு கிணற்றைச் சுற்றி வேலைகளைச் செய்ய வைத்தனர். ஒரு நகைச்சுவையாகத் தொடங்கிய இந்த பயணம் விரைவில் திரைப்படத் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் கதையை எழுதிய சமுத்திரக்கனி, என் கேரக்டரை சுற்றி மேலும் பல காட்சிகளை உருவாக்கி, இறுதியாகக் கதையின் ஒரு முக்கியமான பகுதியாக என்னையும் மாற்றினார் என்று கூறியுள்ளார்.

இப்படித்தான், ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராகவும், எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசராகவும் இருந்த நமோ, தற்செயலாக ஒரு நடிகராக மாறினார். 2009-ல் வெளியான ‘நாடோடிகள்’ திரைப்படம் அவரது நடிப்பு அறிமுகமாக அமைந்ததுடன், விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றிய பெற்றது. அவரது காட்சிகளைப் பார்வையாளர்களும் பெரிதும் பாராட்டினர்.
15 ஆண்டுகள், 80 படங்கள்; இப்போது மூர்த்தி கேரக்டரை சுற்றித் தனிப் படம் கேட்கும் ரசிகர்கள்

நாடோடிகள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உடனடியாக வேறு படங்களில் நடிக்க வேண்டாம் என்று சசிகுமார் அறிவுறுத்தினார். அதனால் நான் கொஞ்ச காலம் வேலை செய்யவில்லை. பிறகு அவர் தனது ‘ஈசன்’ படத்தில் எனக்கு வாய்ப்பளித்தார்,” என்று நமோ நினைவுகூர்ந்தார்.

அதன்ப பிறகு, அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. நமோ நடித்த குறைந்தது இரண்டு படங்கள் ஒவ்வோர் ஆண்டும் வெளியாகின; 2014-க்குள் அந்த எண்ணிக்கை 4-5 ஆக உயர்ந்தது. 2016-ல் மட்டும் அவர் 8 படங்களில் நடித்தார். 15 ஆண்டுகளில், அவர் கிட்டத்தட்ட 80 படங்களில் நடித்துள்ளார். நமோ தனது காமெடி டைமிங்கிற்காக நீண்டகாலமாகப் பாராட்டப்பட்டு வந்தாலும், ‘ஜெயிலர் 2’ அவருக்கு மீண்டும் ஒரு புதிய கவனத்தைக் கொண்டுவந்துள்ளது. 

ரஜினி சாருடன் பல காட்சிகளில் மூர்த்தியாக அவர் நடித்த விதம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. இந்த கேரக்டர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ளதுடன், பல ரசிகர்கள் மூர்த்தி கேரக்டரை மட்டுமே மையமாகக் கொண்டு ஒரு தனிப் படத்தை (spin-off) உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் 542 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

Source link