தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வந்த ஹேப்பி நியூஸ். அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போது?
கேரள மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலை நிவாரண உயர்வு கிடைத்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு!
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அகவிலைப்படியில் அடுத்த உயர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், பல மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஏற்கனவே உயர்த்தத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், கேரள அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 2 சதவீதம் உயர்த்தி தீபாவளிக்கு முன்பாக ஒரு முக்கிய பரிசை வழங்கியுள்ளது.
நவம்பர் மாதம் கிடைக்கும்!
கேரள அரசின் நிதித்துறை பிறப்பித்த உத்தரவின்படி, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலைநிவாரணம் 35 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, அக்டோபர் மாத ஊதியத்துடன் சேர்த்து நவம்பர் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கெல்லாம் கிடைக்கும்!
திருத்தப்பட்ட அகவிலை நிவாரணம் (DR), நவம்பர் மாதம் முதல் ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். இந்த உயர்வு மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களுக்குப் பொருந்தும். இருப்பினும், கே.எஸ்.இ.பி (KSEB) மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி (KSRTC) போன்ற நிறுவனங்கள் இதற்கெனத் தனித்தனி உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டியிருக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி!
இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்களும் அரசின் அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 60 சதவீத விகிதத்தில் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அடுத்தகட்ட மாற்றங்களின் மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் 3 சதவீத உயர்வு ஏற்பட்டு, அது 63 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்ப்பு மட்டுமே.
கூடுதலாக கிடைக்கும் சம்பளம்!
உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயாக இருந்தால், 3 சதவீத உயர்வு மூலம் அவர்களுக்கு மாதம் கூடுதலாக ரூ. 540 கிடைக்கும். அதேபோல, ரூ. 56,100 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மாதம் ரூ. 1,683 வரை கூடுதல் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.
தீபாவளி பரிசு கிடைக்குமா?
தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த பண்டிகைக் காலத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். அதற்கான அறிவிப்பு வந்தால் அது அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய தீபாவளி பரிசாக இருக்கும்.
