நமது சிறப்பு நிருபர்இதற்கு முன் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் மாநில முதல்வர்களே

நமது சிறப்பு நிருபர்

இதற்கு முன் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் மாநில முதல்வர்களே வெளிப்படையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்யும் போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தால் அம்மாநில முதல்வர் வேட்பாளராக இருப்பவர், எதிர்க்கட்சியாக இருந்தால் மத்தியில் ஆளுங்கட்சி அல்லது பிரதமரை விமர்சிப்பார். அதே போல், பிரதமரும் மத்திய அமைச்சர்களும் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு பிரசாரத்திற்கு சென்று அம்மாநில எதிர்க்கட்சி முதல்வர் வேட்பாளராக இருப்பவரை விமர்சிப்பார்கள். மற்றபடி ஒரு மாநில முதல்வர், தேர்தல் நடக்கும் மாநில முதல்வரை விமர்சிக்கும் வழக்கமெல்லாம் கிடையாது. ஆனால் இம்முறை, இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த சபை நாகரீகத்தை உடைத்து விட்டார்கள்.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், எப்போதும் சர்ச்சைக்கு பெயர்போன மேற்கு வங்க முதல்வர் மம்தா தான். சட்டமன்ற தேர்தல் நடக்கும் தமிழ்நாட்டில் திமுக உடன் பாஜ, காங்., ஆகிய கட்சிகள் ரகசிய உடன்பாடு வைத்துள்ளன என்று ஆரம்பித்து, இங்கு முதல்வராக இருக்கும் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார். இந்த புது ‛‛டிரெண்ட்” பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மம்தா காட்டிய வழி ஸ்டாலினுக்கும் பிடித்து விட்டது போல. மதுரை மத்தியில் பாஜ சார்பில் போட்டியிடும் ராமசீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்த போது உடன் கலந்துகொண்ட மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் ‛‛பாஜ எம்எல்ஏக்களை தேர்வு செய்தால் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்” என்று கொளுத்திப் போட்டார். அது அப்படியே பற்றிக்கொண்டது.

உடனே பதில் சொல்லிய தமிழக முதல்வர், ‛‛மெட்ரோ திட்டத்தை கொண்டு வருவதற்கு மகாராஷ்டிரா முதல்வர் பிளாக் மெயில் செய்கிறார்” என்று காரசாரமாக அறிக்கை வெளியிட்டார். இந்த ‛‛டிரெண்ட்” பக்கத்து மாநிலத்திற்கும் பரவியது. கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் நடப்பதால் அங்கு காங்., சார்பில் பிரசாரம் செய்வதற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சென்றிருந்தார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘கேரளா கம்யூனிஸ்ட் அரசு கேரளாவுக்கு என்னதான் வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளது? கண்ணூர் என்பது கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த மாவட்டம். அங்குள்ள பல கட்சித் தொண்டர்களிடம் நான் பேசினேன். இந்த மாவட்டத்துக்கு ஏதேனும் சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் வந்துள்ளனவா என்று நான் அவர்களிடம் கேட்டேன். இந்த மாவட்டத்துக்காக எதுவும் செய்யப்படவில்லை என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

முதல்வரின் சொந்த மாவட்டமே வளர்ச்சியடையாத நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்’ என்று கூறினார். தங்கள் மாநில முதல்வரைப் பற்றி இன்னொரு மாநில துணை முதல்வர் விமர்சனம் செய்தது கேரளாவில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இப்படியாக புதுப்புது டிரெண்ட்டுகளை இந்த தேர்தல் உருவாக்கிக்கொண்டுள்ளது. இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ என்று திருவாளர் பொதுஜனம் திகைத்துப் போய் நிற்கிறார்.

Source link