-நமது டில்லி நிருபர்-
இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் வந்தார். அவர் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்தினார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: போலந்தும், இந்தியாவும் தங்களுக்கு இடையே உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். உலக அரங்கில் இந்தியா வகிக்கும் முக்கியப் பங்கை நாங்கள் மதிக்கிறோம், பாராட்டுகிறோம்.
தற்போதைய நிச்சயமற்ற, அரசியல் ரீதியாக நிலையற்ற சூழலில் இந்தியாவின் பங்களிப்பு ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. பிரதமர் மோடியை போன்ற ஒருவர், இந்தியா போன்ற வலிமைமிக்க நாட்டை வழிநடத்துவது, எங்கள் அனைவருக்கும் ஒரு நம்பிக்கைக் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. உங்களை எனது நண்பர் என்று அழைத்துக்கொள்வதில் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
கடந்த 35 ஆண்டுகளில், நமது இரு நாடுகளும் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வெற்றியையும், வலுவான வளர்ச்சியையும் கண்டுள்ளன. எந்தவிதத் தயக்கமும் இன்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியா மற்றும் போலந்து அடைந்து வரும் வளர்ச்சியை உலகம் பொறாமையுடன் பார்த்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு டொனால்ட் டஸ்க் கூறினார்.
